ஏழைகளின் வாழ்வாதாரம் உயர அதிமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள்: தளவாய்சுந்தரம் பேச்சு

நாகர்கோவில்: ஏழைகளின் வாழ்வாதாரம் உயர எண்ணற்ற திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்துகிறது என்று தளவாய்சுந்தரம் கூறினார்.குமரி  மாவட்டம், தோவாளை ஒன்றியம் இறச்சகுளம், ஈசாந்திமங்கலத்தில் தமிழக அரசின் இலவச ஆடுகள் வழங்கும் நிகழ்ச்சி, கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் பிரசாந்த் எம். வடநேரே தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம் 258 பயனாளிகளுக்கு, ரூ.32.89 லட்சம் மதிப்பில், ஒரு பயனாளிக்கு 4 ஆடுகள் வீதம்  1032 வெள்ளாடுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது :மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, ஏழை, எளிய மக்களின் வாழ்வு உயர எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை தந்தார். அவரது வழியில் நடைபெறும் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான நல்லரசு பல்வேறு திட்டங்களை மக்கள் நலன்கருதி, தந்து நிறைவேற்றி வருகிறது. அவ்வகையில், விலையில்லா வெள்ளாடுகள் கொடுக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் ஏழை பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், பொருளாதார முன்னேற்றத்தை மேம்படுத்துவதற்காக, இவ்வாறான திட்டங்கள் எந்த மாநிலத்திலும் இல்லாதவாறு தமிழகத்தில் மட்டும் அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள 4 விலையில்லா வெள்ளாடுகளும் அதற்கான கொட்டகைகள் அமைக்க ரூ.2000, காப்பீடுக்காக ரூ.300, போக்குவரத்து செலவிற்காக ரூ.150 மற்றும் பயிற்சிக்காக ரூ.300 ஆக மொத்தம் ரூ.12,750- செலவில் பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் தரப்பட்டுள்ளது. பெண்கள் இத்திட்டத்தினை பயன்படுத்தி தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.இவ்விழாவில், இணை இயக்குநர் கால்நடை பராமரிப்பு துறை ஜோசப் சந்திரன், உதவி இயக்குநர் (கால்நடை பராமரிப்புத்துறை) சுவாமிநாதன், மாவட்ட ஆவின் தலைவர் அசோகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜன், ஆரல்வாய்மொழி  தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தலைவர் எஸ்.கிருஷ்ணகுமார், அதிமுக நிர்வாகிகள் ஜெயசீலன், விக்ரமன், ரபீக், இ.என்.சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: