2011 தேர்தல் வாக்குறுதியாக ஜெயலலிதா அறிவித்தது வேலூரில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அறிவிப்பு காற்றோடு போச்சு

*தினமும் 50 ஆயிரம் பேர் வந்து செல்லும் இடத்தில் அடிப்படை வசதிகள் இல்லை

*இட நெருக்கடியில் சிக்கித் திணறும் வாகனங்கள்

வேலூர் :  வேலூரில் ஒருங்கிணைந்த பஸ் நிலைய அறிவிப்பு காற்றோடு போன அறிவிப்பாகவே ஆனதால், அடிப்படை வசதியின்றி நாள்தோறும் 50 ஆயிரம் பேர் வரை புழங்கும் வேலூர் புதிய பஸ் நிலையம் நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. வேலூர் என்றாலே அனைவரது நினைவில் நிற்பது வெயில்தான். வெயிலுக்கு பெயர் போன வேலூரில் வேலூர் கோட்டை, சிஎம்சி மருத்துவமனை, விஐடி பல்கலைக்கழகம், ஸ்ரீபுரம் பொற்கோயில் என கல்வி, மருத்துவம், ஆன்மிகம், சுற்றுலா என்று பல்வேறு சிறப்புகள் வேலூருக்கு வளர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதனால் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வேலூரை நோக்கி வரத்தொடங்கியுள்ளனர். மேலும் சென்னை-பெங்களூருக்கு இடையே உள்ள முக்கிய மாநகரமாகவும், சித்தூர்-திருவண்ணாமலையை இணைக்கும் விதமாகவும் உள்ளது.

இப்படி மிக முக்கிய நகரமாக மாறிய வேலூர் நகராட்சி கடந்த 2008ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை வேலூர் நகருக்கான பஸ் நிலையம் வேலூர் அண்ணா சாலையில் கோட்டைக்கு எதிரே இயங்கி வந்தது. வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டினர் வருகை அதிகரித்ததால் மக்கள் தொகை பெருக்கம் என்பது அதிகரித்தது. இதனால் வேலூர் நகரத்தில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக அதிகரித்தது. இதில் அண்ணா சாலையில் உள்ள பழைய பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய போதிய இடவசதி இல்லாததால் வேலூருக்கு புதிய பஸ் நிலையம் அமைக்க இடம் தேவைப்பட்டது. இதற்காக சேண்பாக்கம், சத்துவாச்சாரி, முத்துமண்டபம் போன்ற பல்வேறு இடங்கள் பஸ் நிலையத்துக்காக ஆய்வு  செய்யப்பட்டது. ஆனால் அரசியல் புள்ளிகள் சிலர் பஸ் நிலையத்திற்கான இடம் தேர்வு செய்வதில் முட்டுக்கட்டை போட்டனர்.

இதற்கிடையே கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வேலூர் மாவட்ட கலெக்டராக இருந்த எஸ்.கோபாலகிருஷ்ணன், அதிரடியாக நடவடிக்கை மேற்கொண்டு வேலூர் பாலாற்றங்கரை செல்லியம்மன் கோயில் அருகே மூடப்பட்ட கூட்டுறவு பழத்தொழிற்சாலையை அதிரடி நடவடிக்கை மூலம் பஸ் நிலையமாக மாற்றினார். அதோடு மாவட்ட பொதுநிதி, எம்பி, எம்எல்ஏ நிதி மூலமும் புதிய பஸ் நிலையத்தில் முதல்கட்ட அடிப்படை கட்டமைப்புகளும், வசதிகளும் செய்யப்பட்டன.

இதில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அப்போது இருந்த மக்கள் தொகைக்கே இடநெருக்கடியாக இருந்தது. வேலூரை நோக்கி வெளிமாநிலம், மற்றும் வெளிமாவட்ட மக்கள் ஏராளமானோர் சுற்றுலா, கல்வி போன்ற பல்வேறு காரணங்களுக்காக வருகை புரிந்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் வேலூர் புதிய பஸ் நிலையத்திற்கு வந்து இறங்கி அங்கிருந்து தாங்கள் செல்லவேண்டிய இடங்களுக்கு செல்ல பஸ்களைத்தான் பயன்படுத்தி வருகின்றனர். பயணிகள் வருகை நாள் ஒன்றிற்கு 50 ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளதால் தினமும் சுமார் 500க்கும் மேற்பட்ட பஸ்கள் தற்போது இங்கிருந்து இயக்கப்படுகின்றன. இவ்வாறு முக்கிய அங்கம் வகிக்கும் வேலூர் புதிய பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகள் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. மேலும் இரவு நேரங்களில் போதிய மின்விளக்குகள் எரியாததால் கீழே விழுந்து ரத்தகாயத்துடன் செல்லும் நிலை உள்ளது.

மேலும் தாகத்தை தணிக்க குடிநீர் வசதியும் கிடையாது. இயற்கை உபாதைகளுக்காக கட்டண கழிவறைகள் 5 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. பெயரில் மட்டுமே இவை நவீன கழிவறைகள். ஆனால் கழிவறை உள்ளே செல்பவர்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு செல்ல வேண்டிய நிலைதான் என்று பயணிகள் குமுறுகின்றனர். இதில் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட இலவச கழிவறை மழை பெய்து தானாக சுத்தம் செய்துகொண்டால் மட்டுமே உண்டு. இல்லையெனில் மழை வரும் வரை அவ்வழியாக செல்பவர்களை, துர்நாற்றமே கொன்று விடும். அந்தளவிற்கு சுகாதாரமற்ற நிலை உள்ளது.

மேலும் பயணிகள் ஓய்வறையில் வீசும் துர்நாற்றத்தால் பயணிகள் பெரும்பாலானோர் ஓய்வறையையே புறக்கணித்து வருகின்றனர். அதிலும் சிலர் வேறு வழியின்றி பயன்படுத்தினால் துர்நாற்றம் அவர்களை விரட்டி அடிக்கிறது. இப்படி பல இன்னல்களை சந்திக்கும் நிலையில் புதிய பஸ் நிலையத்தின் தரம் சுகாதார சீர்கேட்டின் மையமாக உள்ளதாக பயணிகள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். இந்த அவலநிலையில் உள்ள வேலூர் புதிய பஸ் நிலையத்தை விரிவாக்கி போதிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

அதற்கேற்ப கடந்த 2011ம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியாக ஜெயலலிதா, வேலூரில் உள்ள பஸ் நிலையம் ஒருங்கிணைந்த பஸ் நிலையமாக விரிவாக்கம் செய்யப்படும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பு அறிவிப்பாகவே இதுவரை உள்ளது. இது காற்றோடு கரைந்த கற்பூரமானதா என்பதை ஆட்சியாளர்கள்தான் விளக்க வேண்டும். ஏற்கனவே 2011ம் ஆண்டு தொடங்கி 2016 வரை பொறுப்பில் இருந்த மாநகராட்சி கவுன்சில் பொறுப்பேற்ற போது, பஸ் நிலைய விரிவாக்கத்துக்காக தேர்வு செய்யப்பட்ட 9 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு அங்கு விரிவாக்கப்பணி மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

மேலும் முன்பு இருந்த கலெக்டர் நந்தகோபால், அதிகாரிகளுடன் புதிய பஸ் நிலைய விரிவாக்கப்பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் பஸ் நிலைய விரிவாக்கப்பணியை உடனே மேற்கொள்ளவும் உத்தரவிட்டார். ஆனால் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் வேலூர் மக்கள் கடும் விரக்தியடைந்துள்ளனர். அதோடு வெளியூர்களில் இருந்து வேலூர் வரும் மக்கள் பஸ் நிலையத்தின் அவல நிலையை கண்டு முகம் சுளிக்கும் நிலையாக உள்ளது. வேலூர் புதிய பஸ் நிலையத்தை ஒருங்கிணைந்த நவீன பஸ் நிலையமாக தரம் உயர்த்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பயணிகளின் பல ஆண்டுகால கோரிக்கையாக உள்ளது.

சட்டமன்றத்தில் பேசியும் பயனில்லை

வேலூர் எம்எல்ஏ கார்த்திகேயன் கூறியதாவது: வேலூர் புதிய பஸ் நிலையத்தை ஒருங்கிணைந்த பஸ் நிலையமாக மாற்றப்படும் என்று ஜெயலலிதா கடந்த 2011 சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதியாக வேலூர் கோட்டை  மைதானத்தில் பேசினார். மேலும் பஸ் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளையும் கையகப்படுத்தி பஸ் நிலைய விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறினார். ஆனால் 9 ஆண்டுகள் கடந்த நிலையில் இந்த தேர்தல் வாக்குறுதி கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதற்கிடையே அப்போதைய வேலூர் மாநகர மேயர் கார்த்தியாயினி, வேலூர் புதிய பஸ் நிலையம் விரிவாக்கம் செய்ய போதுமான இடம் உள்ளது என்று தீர்மானம் போட்டார். மேலும் அப்போது இருந்த அரசு அதிகாரிகளும் லஞ்சம் பெற்றுக்கொண்டு வேலூர் புதிய பஸ் நிலையத்தை சுற்றிலும் முளைத்த ஆக்கிரமிப்புகளை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர். வேலூர் புதிய பஸ் நிலையம் ஒருங்கிணைந்த நவீன பஸ் நிலையமாக மாற்றப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது குறித்து சட்டமன்றத்தில் நான், கேள்வி எழுப்பினேன். ஆனால் அதற்கு பதில் ஏதும் இல்லை.

இப்படி அதிமுக அரசு வாக்குறுதிகளை மட்டும் கூறி வருகிறதே தவிர நிறைவேற்றியபாடில்லை. இவ்வாறு அவர் கூறினார். மாநகராட்சி ஆணையாளர் சிவசுப்பிரமணியன்  கூறுகையில், ‘வேலூர் புதிய பஸ்நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 2  அடுக்கு பஸ்நிலையமாக மாற்றப்பட உள்ளது. இதற்காக திட்ட அறிக்கை  தயாரிக்கப்பட்டு அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறோம். அனுமதி கிடைத்தவுடன்  தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஆனால் ஒருங்கிணைந்த பஸ்நிலையம்  அறிவிப்பு குறித்து எனக்கு தெரியாது’ என்றார்.

ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் 2 அடுக்கு நவீன பஸ்நிலையம்  சாத்தியமா?

ஒருங்கிணைந்த பஸ் நிலையமாக வேலூர் புதிய பஸ் நிலையம் மாற்றப்படும் என்று தேர்தல் வாக்குறுதியாக ெஜயலலிதா அறிவித்து சுமார் 9 ஆண்டுகளாகி விட்ட நிலையில், அறிவிப்பு காற்றோடு போய்விட்டது. இந்நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வேலூர் புதிய பஸ் நிலையம் 2 அடுக்கு கொண்ட நவீன பஸ் நிலையமாக மாற்றப்படும் என்று அதிகாரிகள் கூறி வருகின்றனர். ஆனால் பாலாற்றின் கரையில் 2 அடுக்கு மாடி பஸ் நிலையம் கட்டுவது சாத்தியமா? என்பது கேள்விக்குறிதான்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: