நாமக்கல் வழியாக கரூர்-சென்னைக்கு விரைவு ரயில் இயக்க எதிர்பார்ப்பு

சேலம் : கரூரில் இருந்து சென்னைக்கு  நாமக்கல் வழியே எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க வேண்டும் என பயணிகள்  கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட சேலம்-கரூர் இடையே 86 கிலோ மீட்டருக்கு புதிதாக அகல ரயில்பாதை அமைக்கப்பட்டவுடன், முதல் ரயிலாக பெங்களூரு-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் அறிவிக்கப்பட்டது.

இந்த ரயில் தினமும் மாலை 5 மணிக்கு பெங்களூருவில் புறப்பட்டு, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி வழியாக நாகர்கோவிலை மறுநாள் காலை 8 மணிக்கு சென்றடைகிறது. இதேபோல், சேலம்-கரூர் பயணிகள் ரயில், சென்னை-பழனி எக்ஸ்பிரஸ், சென்னை-மதுரை தூரந்தோ ஆகிய ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த வழித்தடத்தில், கரூர்- சென்னை இடையே எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்கிட வேண்டும் என ரயில் பயணிகள் நலக்குழுவினரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த சூழலில் தற்போது சேலம்-கரூர் பாதையை மின்மயமாக்கும் பணி முடிவடைந்து,  சோதனை ஓட்டமும் நடந்துள்ளது. இதையடுத்து இந்த வழித்தடத்தில் மின்சார இன்ஜின் ரயிலை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக தூத்துக்குடி- மைசூர், நெல்லை- ஜபல்பூர் எக்ஸ்பிரஸ் ரயில்கள், இந்த வழித்தடத்தில் மின்சார இன்ஜினில் இயக்கப்படுகிறது.

மேலும், இம்மார்க்கத்தில் கூடுதல் ரயில்களை இயக்க ரயில்வே அதிகாரிகள் திட்டமிட்டு வருகின்றனர். வட மாநிலங்களில் இருந்தும், கோவையில் இருந்தும் ஈரோடு மார்க்கத்தின் வழியே செல்லும் சில ரயில்களை சேலம், நாமக்கல், கரூர் வழியே திருப்பி விடவும் முடிவு செய்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை ரயில்வே நிர்வாகம் செய்து வருவதாக கூறப்படுகிறது.

 இந்த ரயில்களோடு புதிதாக கரூர்-சென்னை இடையே எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க வேண்டும் என ரயில்வே பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இரவு நேரத்தில் விருத்தாசலம் வழித்தடத்தில் கரூரில் இருந்து நாமக்கல் வழியே சென்னை சென்றடையும் வண்ணம் இந்த ரயிலை இயக்கிட வேண்டும் என கோரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது.  இதுதொடர்பாக சேலம் ரயில்வே கோட்டத்தில் பயணிகள், அரசியல் கட்சிகள் கோரிக்கை மனுக்களை கொடுத்துள்ளனர்.

ஆனால்,  மத்திய அரசின் பொதுபட்ஜெட்டில் எவ்வித அறிவிப்பும் வரவில்லை. இருப்பினும், புதிதாக கரூர்- சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பயணிகளின் கோரிக்கையாக உள்ளது. இதை ரயில்வே நிர்வாகம் நிறைவேற்ற முன்வருமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: