தீர்த்தக்குளங்கள் நிறைந்த திருச்செங்கோடு மலை

* பிணிகள் போக்கும் அற்புதம்

திருச்செங்கோடு :  திருக்கோவில்கள் நிறைந்த தமிழ்த்திருநாட்டில் கொங்கேழு சிவத்தலங்களில் முதன்மை பெற்று விளங்குவது திருச்செங்கோடு. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய  முப்பெருமையும் பெற்ற இத்தலத்தை  புராணங்கள் போற்றிப்பாடியுள்ளது. தேவாரம், திருவாசகம், பெரியபுராணம், திருப்புகழ், கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம் போன்ற பழந்தமிழ்  நூல்களில் திருச்செங்கோட்டில் உள்ள ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் கோவில் போற்றப்படுகிறது. ஆண்பாதி பெண் பாதி உருவில் நின்ற திருக்கோலத்தில் இறைவன்  அருள்பாலிக்கிறார். இதனை தொன்மைக்கோலம் என்று தொல்காப்பியம் கூறுகிறது.

ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் குடி கொண்டுள்ள திருச்செங்கோட்டுத் திருமலையில் புனித தீர்த்தங்கள் அதிகளவில் இருப்பது இன்றைய இளையதலைமுறையினர் அதிகம் அறியாத ஒன்று. படிகள் வழியாக மலைக்கோவிலுக்கு செல்லும்போது இவைகளைக்  கடந்துதான் பக்தர்கள்  வரவேண்டும். இந்த தீர்த்தங்களில் நீராடி பக்தர்கள் தங்கள் தீவினைகளைப் போக்கிக் கொள்வார்கள், மலைமீதுள்ள தேவதீர்த்தம், கணபதி தீர்த்தம்,  விஷ்ணு தீர்த்தம், இந்திர தீர்த்தம், சிவ தீர்த்தம்,  குமாரதீர்த்தம், பாபநாச தீர்த்தம், சண்முக தீர்த்தம், வாயு தீர்த்தம், அக்னி தீர்த்தம். சப்த கன்னிகள் தீர்த்தம்  போன்றவை பெரும் மகிமை கொண்டவை என்கின்றனர் ஆன்மீக முன்னோடிகள்.

இது குறித்து அவர்கள் மேலும் கூறுகையில், ‘‘தேவதீர்த்தம் என்பது நவ பாஷாணங்கள் எனக்கூறப்படும் ஒன்பது வகையான அரிய மூலிகைச்சாற்றால் சுண்ணக்கட்டு முறைப்படி  போகர் என்ற சித்தரால்  உருவாக்கப்பட்ட 6 அடி உயரம்  கொண்ட மூலவரின் காலடியில் ஓடிக்கொண்டிருக்கும் நீரூற்று ஆகும். இந்த சிலையிலிருந்து வெளியாகும் வெப்பக் கதிர்வீச்சால் சிலை  சேதமடையாமல் இருக்க இந்த தீர்த்தம் உதவுகிறது. ஆகாய கங்கை எனவும் இதனைக்கூறுவார்கள்.  இதனை அர்ச்சகர்கள் மட்டுமே எடுத்து பக்தர்களுக்கு வழங்குவார்கள்.

சிவன் கோவில்களில் தீர்த்தம் வழங்குவது இங்கு மட்டுமே. நவபாஷாணச்சிலையைக் கடந்து வருவதால் பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும்  அருமருந்தாக இந்த  தீர்த்தநீர் பயன்படுகிறது. கணபதி தீர்த்தம் கோவிலுக்கு வடக்குப் பக்கத்தில் இளைப்பாற்றி மண்டபத்திற்கு அருகில் உள்ளது. பார்வதி தேவியார் இறைவனின்  இடப்பாகம் வேண்டி தவம் செய்த போது  அவர் நீராடுவதற்காக அவரது குமாரர் வினாயகப் பெருமானால் தோற்றுவிக்கப்பட்டது.

 மலைக்கோவிலின்  கிழக்கு மதில்சுவற்றை ஒட்டி கிழக்குப் புறத்தில் அமைந்துள்ளது  நாகதீர்த்தம்.  ஆதிசேடனுக்கும், வாயு பகவானுக்கும் போர் மூண்டதில் தேவர் முனிவர் மற்றும் பல்வகை உயிரினங்கள் துன்பமடைந்தன. அதனால் ஏற்பட்ட பாவத்தை    போக்க  ஆதிசேடன் தோற்றுவித்து இதில் நீராடி பாவங்களைப போக்கிக் கொண்டார். சிவதீர்த்தம் இறைவன் சிவபெருமானால் தேவர்களும், முனிவர்களும், ஏனையோரும்  நீராடி தங்கள் பாவங்களை போக்கிக் கொள்ள தோற்றுவிக்கப்பட்டது.

திருச்செங்கோடு மலையில் உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு செல்லும் வழியில் குமாரதீர்த்தம் உள்ளது. சிவபெருமான் அருளாணைப்படி வாணாசுரன் என்பவன் இதில் நீராடி  பாவங்களைப்போக்கி சிவகணங்களின்  தலைமை ஏற்று வாழ்ந்தான். பாபாநாச தீர்த்தம் இளைப்பாற்றி மண்டபத்திற்கும் தேவரடியார் மண்டபத்திற்கும் இடையில் உள்ளது. பேய்  பிடித்த திடமதி என்ற அந்தணன் பாபநாச தீர்த்தத்தில் நீராடி பிணி நீங்கப் பெற்றான். பெரும்பாலான தீர்த்தங்கள் படிவழியில் சிறு குளங்களைப்போல காணப்படுகிறது. இந்த தீர்த்தங்களில் அரிய மலர்களும் பூத்துக் குலுங்கி மணம் வீசுகிறது. இறையருளால் உருவான, எப்போதும் வற்றாத இயற்கை  சுனைகள் மூலம் அவற்றிற்கு நீர் கிடைக்கிறது,’’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: