உள்ளத்தை கொள்ளை கொள்ளும் கொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு ரோப்கார் வசதி

* நிறைவேறுமா பயணிகளின் நீண்டகால எதிர்பார்ப்பு

சேந்தமங்கலம் : கொல்லிமலை ஆகாயகங்கை நீர்வீழ்ச்சிக்கு  செல்வதற்கு ரோப்கார் வசதி ஏற்படுத்தப்படுமா? என்ற எதிர்பார்ப்பு சுற்றுலாப் பயணிகளிடம் நெடுங்காலமாக தொடர்ந்து வருகிறது.  தமிழகத்தின் பிரசித்தி பெற்ற மலைவாசஸ்தலங்களில் ஒன்றான கொல்லிமலை, நாமக்கல் மாவட்டத்தில் இருக்கிறது. சில்லென்று ஆரத்தழுவும் காற்றும், மிரட்சியூட்டும் அடர்ந்த வனங்களும் கொல்லிமலையின் பிரதான அடையாளம். வல்வில் ஓரி மன்னர்கள் ஆண்ட கொல்லிமலையில்  அறப்பளீஸ்வரர் கோவில், எட்டுக்ககை அம்மன் கோவில், பெரியசாமி கோவில், தாவரவியல் பூங்கா,  படகு இல்லம், முதுமக்களின் தாழி, சீக்குப்பாறை என்று எத்தனையோ இடங்கள் கவனத்தை ஈர்த்தாலும் மனதில் ஆழமாகப்பதிந்து நிற்பது ஆகாயகங்கை அருவி. வெள்ளியை உருக்கி விட்டது போல் ஆகாயத்தை பிளந்து கொண்டு 160 அடி உயரத்தில் இருந்து கொட்டி, உள்ளங்களை இழுத்து விடுகிறது இந்த அருவி.  

மலை உச்சியில் உற்பத்தியாகும் அய்யாற்றின் மேல்புறத்தில் இருந்து தண்ணீராக வந்து அருவியாக கொட்டுகிறது ஆகாயகங்கை. 1050 படிக்கட்டுகள் கீழே இறங்கி சென்றால்தான் நீர்வீழ்ச்சியின் முழு அழகையும் கண்டு ரசிக்க முடியும். செங்குத்தாக செல்லும் இந்த படிக்கட்டுகளில் வயதானவர்கள்,  உடல் நலம் குன்றியவர்கள் இறங்கி செல்வதும் ஏறுவதும் மிகவும சிரமம். இதனைப் போக்கும் விதமாக வனத்துறையின் சார்பில் ரோப் கார் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் அரசு இதுவரையிலும் செவிசாய்க்கவில்லை. நாளுக்கு நாள், இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. ஆனால் அவர்களின் கோரிக்கை பாராமுகமாக இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து முன்னாள் எம்எல்ஏ பொன்னுசாமி கூறுகையில் கொல்லிமலைக்கு விடுமுறை நாட்களில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து அதிகளவில் மக்கள் வருகின்றனர். சென்னை, பாண்டிச்சேரி  மட்டுமல்லாமல் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். அற்புதமான சுற்றுச்சூழலும், மூலிகை வாசமும் கொண்ட அருவி, அனைவரையும் கவர்ந்திழுக்கிறது. எனவே அருவிக்கு செல்ல ரோப்கார் வசதி ஏற்படுத்த வேண்டும். இதேபோல் சுற்றுலாத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தாவரவியல் பூங்கா, படகு இல்லம் போன்றவற்றை முறையாக பராமரிக்க வேண்டும்.

மலைக்கு செல்லும் மற்றொரு பாதையான முள்ளுக்குறிச்சி நாயன்காடு சாலைப் பணியை விரைந்து முடிக்க வேண்டும். சோளக்காட்டில் இருந்து அறப்பளீஸ்வரர் கோவிலுக்கு செல்லும் சாலை மிகவும் மோசமாக உள்ளது. இதனை சீரமைத்தால் இன்னும் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். கொல்லிமலையில் உள்ள சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தினால் இங்குள்ள மலைவாழ் மக்களின் வாழ்க்கை தரமும் சற்று மேம்படும்,’’ என்றார்.

வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அருவிக்கு செல்லும் படிக்கட்டுகள் அதிக எண்ணிக்கையாக இருந்தது. தற்போது படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது. தற்போது அருவியின் அருகில் பாலம் கட்டும் திட்டம் உள்ளது. இதுகுறித்து அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு ₹40 லட்சம் செலவாகும்.    பாலம் அமைத்தால் தடாகத்தில் இறங்காமல் அருவியின் அருகிலேயே சென்று குளிக்கலாம். ஆனால் ரோப் கார் அமைக்கும் திட்டம் இதற்கு இல்லை. பெரியசாமி கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் வருவதால் அங்கு ரோப் கார் அமைக்க முடியும். இது தொடர்பாக அரசுக்கு கடிதம் அனுப்ப முடிவு செய்துள்ளோம். மாசிலா அருவி கொல்லிமலை ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் வருகிறது. அங்கு எங்களால் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள முடியவில்லை’’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: