கறுப்பு தினம் அனுசரிக்க வேண்டிய நிலையை ஏற்படுத்திவிட்டார் கிரண்பேடி: முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுச்சேரி: இன்றைய தினத்தில் மதச்சார்பற்ற தலைவர்களும், தொண்டர்களும், தங்களது வீட்டில் கருப்பு கொடி ஏற்ற வேண்டும் என நேற்று முடிவு செய்யப்பட்டது. அதன் படி இன்று காலை 9 மணி அளவில் எங்களது வீட்டில் கருப்பு கொடி ஏற்றப்பட்டது. கறுப்பு தினம் அனுசரிக்க வேண்டிய நிலையை கிரண்பேடி ஏற்படுத்திவிட்டார் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மத்தியில் இருந்து நிதி வந்தால் அதை தடுத்து திருத்துவது, மக்களுக்கு நிவாரணம் கொடுத்தால் அதற்கு தடையாக இருப்பது, சர்வாதிகார ஆட்சியை புதுச்சேரி மாநிலத்தில் நடத்த முயற்சிப்பதாக நாராயணசாமி குற்றச்சாட்டு எழுப்பியியுள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கிரண்பேடி உதாசீனப்படுத்திவிட்டார். கிரண்பேடியை திரும்பிப்போ என வலியுறுத்தி நாளை ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் நடத்தப்பட உள்ளது. 20-ம் தேதி சிறை நிரப்பும் போராட்டம்; 21-ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மக்கள் நலன் தொடர்பான 39கோப்புகளுக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளிக்க கோரி முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கடந்த 5வது நாளாக ஆளுநர் மாளிகை முன்பு தொடர் தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர். இவருடன் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். நாராயணசாமி கருப்பு சட்டையுடனும், அமைச்சர்கள், காங். உள்ளிட்ட கட்சிகள்  கருப்பு துண்டும் அணிந்து கடந்த 5 நாட்களாக தர்ணாவில் ஈடுபட்டு வருகினறனர்.

மேலும் போராட்டத்தின் ஒரு பகுதியாக முதலமைச்சர் நாராயணசாமி தனது வீட்டில் கருப்புக் கொடி ஏற்றியுள்ளார். இதேபோல் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளின் அலுவலகங்களிலும் கருப்பு கொடி ஏற்றி ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனிடையே டெல்லி சென்றுள்ள துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வரும் 21-ஆம் தேதி புதுச்சேரி வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவசர அவசரமாக இன்று பிற்பகல் புதுச்சேரி திரும்புகிறார்.

இந்நிலையில் நாராயணசாமியை தொலைப்பேசியில் தொடர்பு கொண்ட கர்நாடகா மாநில முதலமைச்சர் குமாராசாமி போராட்டத்திற்கு தனது ஆதரவை தெரிவித்தார். முன்னதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் நாராயணசாமி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: