காஷ்மீர் மாநிலத்தில் அமைதி நிலவ மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்: தமிழக காங்கிரஸ் தலைவர் வலியுறுத்தல்

சென்னை: காஷ்மீர் மாநிலத்தில்  அமைதி நிலவ உரிய நடவடிக்கைகளை  எடுக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தி உள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை: நகர் ஜம்முவில் பயங்கரவாத தாக்குதலில் பலியான 40 வீரர்களில் இருவர் தமிழர்கள் என்கிற துயரச் செய்தியும் நம்மை வேதனைக்கு உள்ளாக்குகிறது. இத்தாக்குதலில் தங்கள் இன்னுயிரை ஈந்த வீரர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த நான்கு ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளின் தாக்குதலில் பலியானவர்கள் எண்ணிக்கை 93 சதவீதம் உயர்ந்திருக்கிறது.

2014 முதல் 18 வரை 1315 பேர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதில் 138 பேர் அப்பாவி பொதுமக்கள். 339 பேர் பாதுகாப்புப் படை வீரர்கள். 838 பேர் தீவிரவாதிகள். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதத்தை ஒழித்து அமைதியை நிலைநாட்டுவேன் என்று பலமுறை உரத்த குரலில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி இந்த புள்ளி விவரங்களுக்கு என்ன பதில் கூறப்போகிறார்?பாகிஸ்தான் மீது பழியை போட்டுவிட்டு தப்பிக்கப் போகிறாரா? இத்தகைய தீவிரவாதம் அங்கே வளர்வதை தடுப்பதற்கு இதுவரை பாரதிய ஜனதா அரசு உறுதியான நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை. எனவே, தலைநகர் டெல்லியில் நடைபெறவுள்ள அனைத்து கட்சிக் கூட்டத்தில் நேரு, ஷேக் அப்துல்லா ஆகியோரது மதச்சார்பற்ற கொள்கையின் காரணமாகவும், நெருக்கமான நட்பினாலும் இந்தியாவோடு இணைக்கப்பட்ட காஷ்மீர் மாநிலத்தில்  அமைதி நிலவ உரிய நடவடிக்கைகளை எடுக்க மத்திய பாஜ அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: