குடிநீர் பிரச்னை தீர்க்க என்ன நடவடிக்கை பெண்களின் சரமாரி கேள்விக்கு பதிலளிக்க அமைச்சர் திணறல்

சென்னை: பள்ளிப்பட்டில் நடந்த ஊராட்சி தத்தெடுப்பு நிகழ்ச்சிக்கு வந்த அமைச்சர் பெஞ்சமினிடம், குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை கிராம மக்கள் கேட்டனர். இதற்கு பதிலளிக்க முடியாமல் அமைச்சர் திணறியதால் பரபரப்பு ஏற்பட்டது. பள்ளிப்பட்டு அடுத்த பாண்டரவேடு ஊராட்சியை அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் கோ.அரி தத்தெடுக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமை வகித்தார். பள்ளிப்பட்டு வட்டாட்சியர் (பொறுப்பு) சரவணன் வரவேற்றார்.  வட்டார வளர்ச்சி அலுவர்கள் ேசகர், சந்திரன் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியை தமிழக ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் தொடங்கி வைத்து, வருவாய் துறை சார்பில் 118 ேபருக்கும், வேளாண்மை துறை சார்பில் 25 பேருக்கும், தோட்டகலை சார்பில் 5 பேருக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட தயாரானார்.

அப்போது, அமைச்சர் பெஞ்சமினை ஏராளமான பெண்கள் திடீரென மறித்து, பாண்டரவேடு பகுதியில் உள்ள காலனியில்  ஒன்றரை வருடமாக குடிநீர் பிரச்னை உள்ளது. இதற்கு தீர்வுகாண பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்பது உள்பட பல பிரச்னைகள் குறித்து சரமாரியாக கேள்வி கேட்டனர். பெண்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய அமைச்சர், உங்கள் பிரச்னைகளை கலெக்டரிடம் சொல்லி தீர்த்து வைக்கிறேன் என்ற மழுப்பலாக கூறிவிட்டு அங்கிருந்து சென்றார். இதனால் அங்கு பரபரப்பு  ஏற்பட்டது.

3 மணிநேரம் காத்திருப்பு

அமைச்சர் பெஞ்சமின் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி  காலை 10.30 மணிக்கு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் ஆண்கள், பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் மற்றும் அதிகாரிகள் வந்திருந்தனர். ஆனால், மதியம் 1.30 மணிக்கே அமைச்சர் வந்தார். இதன் காரணமாக, சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக கிராம மக்களும், அதிகாரிகளும் காத்திருந்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: