புல்வாமா தாக்குதலில் கொல்லப்பட்ட வீரர்களுக்கு பிரியாவிடை: சொந்த ஊர்களில் கண்ணீர் அஞ்சலி

புதுடெல்லி: புல்வாமா தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட சிஆர்பிஎப் வீரர்களுக்கு, அவர்களின் சொந்த ஊர்களில் கண்ணீர் மல்க பிரியாவிடை அளிக்கப்பட்டது. இறுதிச்சடங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு, பாகிஸ்தானுக்கு எதிராக கோஷமிட்டனர். காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் சிஆர்பிஎப் வீரர்கள் 2,500 பேர், 78 வாகனங்களில் கடந்த 14ம் தேதி அவர்களின் முகாம்களுக்கு சென்று கொண்டிருந்தனர்.  புல்வாமா மாவட்டத்தில் ஜம்மு-நகர் தேசிய நெடுஞ்சாலையில் வீரர்களின் வாகனம் சென்று கொண்டிருந்தபோது, ஜெய்ஸ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப்படை தீவிரவாதி அதில் அகமது என்பவன், 100 கிலோ வெடிமருந்துகள் ஏற்றப்பட்ட வாகனத்தில் வந்து, வீரர்கள் சென்ற பஸ் மீது மோதினான். இந்த கொடூர தாக்குதலில் 40 வீரர்கள் மரணம் அடைந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதம் சோகத்தை ஏற்படுத்தியது.

வீர மரணம் அடைந்த வீரர்களின் உடல்களுக்கு தேசியக் கொடி போர்த்தப்பட்டு காஷ்மீரில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவம் மற்றும் சிஆர்பிஎப் உயர் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.  அதன்பின் 40 பேரின் உடல்கள் விமானப்படை விமானம் மூலம் டெல்லியில் உள்ள பாலம் விமானப்படை தளத்துக்கு கொண்டுவரப்பட்டன. அங்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். அதன்பின் சொந்த மாநிலங்களுக்கு  சிறப்பு விமானம் மூலம் வீரர்களின் உடல்கள் அனுப்பி வைக்கப்பட்டன. விமான நிலையங்களில் மாநில அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் வீரர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினர்  பின்னர் சிஆர்பிஎப் வாகனத்தில் வீரர்களின் உடல்கள் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டன. பொதுமக்கள் திரண்டு வந்து வீரர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த வீரர்களின் உடல்களை பார்த்து அவர்களது குடும்பத்தினரும், உறவினர்களும் கதறி அழுத சம்பவங்கள் அனைவருக்கும் கண்ணீரை வரவழைத்தது. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த வீரர் பிரதீப் சிங் யாதவ் உடல் அவர் சொந்த ஊரான கண்ணாஜ் நகருக்கு கொண்டு செல்லப்பட்டு ‘பாரத் மாதா கி ஜே’ கோஷத்துடன் தகனம் செய்யப்பட்டது.  அதைப் பார்த்த அவரது 10வயது மகள் சுப்ரியா மயங்கி விழுந்தர். அவர் உடனடியாக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். 1 மணி நேரத்துக்குப்பின் அவர் வீட்டுக்கு அனுப்பப்பட்டார். யாதவின் மற்றொரு மகளுக்கு இரண்டரை வயது குழந்தை. அதற்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.

பஞ்சாப் வீரர் குல்விந்தர் சிங்(26) அவரது சொந்த ஊரான நூர்பூர் பேடியில் உள்ள ராலி கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவருக்கு அவரது குடும்ப உறுப்பினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். குல்விந்தர் சிங்குக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இறுதி அஞ்சலி செலுத்த வந்த அந்த பெண்ணும், மயங்கி விழுந்தார். குல்விந்தர் சிங் உடலுக்கு அவரது தந்தை தர்ஷன் சிங் தீ மூட்டினார். அப்போது கிராம மக்கள், ‘பாகிஸ்தான் ஒழிக, பாரத் மாதா கி ஜே’ என கோஷம் எழுப்பினர். இவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் நூர்பூர் பேடியில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதேபோல் வீரமரணம் அடைந்த 40 வீரர்களின் உடல்களுக்கும், அவர்களது சொந்த ஊரில் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: