ஜம்மு எல்லையில் தீவிரவாதிகள் தாக்குதல் ரிமோட் குண்டு மூலம் ராணுவ வாகனம் தகர்ப்பு: அதிகாரி பலி, வீரர் படுகாயம்

ஜம்மு: புல்வாமா தாக்குதல் சோகம் மறைவதற்குள், ஜம்மு எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே நேற்று ரோந்து சென்ற ராணுவ வாகனத்தை தீவிரவாதிகள் வெடிகுண்டு வைத்து தகர்த்தனர். இதில், ராணுவ அதிகாரி பலியானார். மேலும், எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. ஜம்முவின் நவ்சீரா செக்டார் பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே ராணுவ வீரர்கள் வாகனத்தில் நேற்று சென்று கொண்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ரிமோட் கன்ட்ரோல் மூலம் வெடிக்கச் செய்யும் வெடிகுண்டு வெடித்து சிதறியது. இதில், வாகனத்தில் சென்ற ராணுவ அதிகாரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். வீரர் ஒருவர் படுகாயமடைந்தார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதுவும், இந்தியாவில் ஊடுருவிய தீவிரவாதிகளின் சதி வேலையாக இருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது. கடந்த 2 தினங்களுக்கு முன், காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் பலியான நிலையில் இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எல்லைக் காட்டுப்பாட்டு கோடு பகுதியில் கடந்த 2 மாதத்தில் 2வது முறையாக ரிமோட் வெடிகுண்டு வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன், கடந்த மாதம் 11ம் தேதி நவ்சீரா செக்டாரில் நடந்த சம்பவத்தில் 2 ராணுவ வீரர்கள் பலியானது குறிப்பிடத்தக்கது. இதேபோல், ரஜோரி எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் திடீரென இந்திய எல்லைகள் மீது தாக்குதல் நடத்தியது.  இதில், இந்திய வீரர் ஒருவர் காயமடைந்தார். இதற்கு இந்திய ராணுவமும் தகுந்த பதிலடி கொடுத்தது.

2ம் நாளாக ஊரடங்கு

காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் தற்கொலை படை தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதை கண்டித்து ஜம்முவில் நேற் றுமுன்தினம் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதில், வன்முறை வெடித்தது. பல இடங்களில் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. இதனால், பதற்றமான பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. ராணுவம் கொடி அணிவகுப்பு நடத்தியது. இந்நிலையில், நேற்றும் 2வது நாளாக பதற்றம் நீடித்தது. இதனால், ஊரடங்கு உத்தரவு நேற்றும் நீட்டிக்கப்பட்டது. ராணுவம் கொடி அணிவகுப்பு நடத்தியது. ஜம்மு பல்கலைக் கழகத்தின் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. ஜம்மு நிலையை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: