கொல்லப்பட்ட வீரர்களுக்காக சிந்திய ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பதிலடி: பிரதமர் மோடி ஆவேசம்

யவத்மால்: ‘‘புல்வாமா தாக்குதல் சம்பவத்துக்காக சிந்திய ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பதிலடி கொடுக்கப்படும்’’ என பிரதமர் நரேந்திர மோடி ஆவேசமாக கூறினார்.காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில்  தற்கொலை படை தீவிரவாதி நேற்று முன்தினம் நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனால், நாட்டு மக்கள் மிகவும் கொந்தளிப்பில் உள்ளனர். இந்த தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ் இ முகமது உள்ளது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க ராணுவத்துக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டு இருப்பதாக பிரதமர் மோடி நேற்று முன்தினம் தெரிவித்தார்.இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம், யவத்மால் மாவட்டத்தில் உள்ள பந்தர்காவாடாவில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்.

அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

பிரிவினைக்குப் பிறகு உருவான ஒரு நாடு (பாகிஸ்தான்) பயங்கரவாத செயல்களை ஊக்குவித்து வருகிறது. திவால் நிலையில் இருக்கும் அந்த நாடு பயங்கரவாதத்தின் மறுஉருவமாக இருக்கிறது. புல்வாமாவில் நமது வீரர்களை தாக்கியவர்கள் எங்கு ஒளிந்து இருந்தாலும் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். அதற்காக, ராணுவத்துக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, பாதுகாப்பு படையின் மேல் நம்பிக்கை வைத்து அமைதி காக்கும்படி நாட்டு மக்களை கேட்டுக் கொள்கிறேன்.  புல்வாமா தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு அனைவரும் வேதனையில் இருப்பதை நான் அறிவேன். நமது வீரர்களின் உயிர்த்தியாகம் வீண் போகாது. தீவிரவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு மோடி பேசினார்.

பின்னர், துலேவில் நடந்த விழாவில் பல்வேறு நலத்திட்டங்களை மோடி தொடங்கி வைத்தார். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ‘‘புல்வாமா தாக்குதலால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சிந்திய ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் தக்க பதிலடி கொடுக்கப்படும். வீரர்களை இழந்து நமது நாடு கொந்தளிப்பில் உள்ளது. கண்களில் கண்ணீர் கசிகிறது. இது, புதிய இந்தியா. புதிய கொள்கைகளை கொண்ட இந்தியா. நம் மீது துப்பாக்கி குண்டுகளையும், வெடிகுண்டுகளையும் வீசியவர்களையும் இந்தியா நிம்மதியாக தூங்க விடாது’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: