விசாரணை என்ற பெயரில் 6 நாளாக தொந்தரவு செய்கிறார்கள்: அமலாக்கத்துறை மீது வதேரா குற்றச்சாட்டு

புதுடெல்லி: ‘‘எனது நிறுவனத்தின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி, கடந்த 6 நாட்களாக தொந்தரவு செய்கிறது’’ என ராபர்ட் வதேரா குற்றம் சாட்டியுள்ளார். ராஜஸ்தான் மாநிலம், பிகானிர் பகுதியில் நடந்த நில மோசடி வழக்கு தொடர்பாக, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த ஊழல் தொடர்பாக ராபர்ட் வதேரா நிறுவனத்துக்கு சொந்தமான 4.62 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை நேற்று முன்தினம் முடக்கியது. இது குறித்து ராபர்ட் வதேரா டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில், ‘‘என்னிடம் கடந்த 6 நாட்களாக அமலாக்கத்துறை விசாரணை நடத்துகிறது.

நாள் ஒன்றுக்கு 8 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை விசாரணை நடத்தப்படுகிறது. முடக்கப்பட்ட எனது சொத்துக்கள் நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இந்த நடவடிக்கை அதிகார துஷ்பிரயோகத்தை காட்டுகிறது. பழிவாங்கும் செயல். கொடூரமான தொந்தரவு. எனக்கு நீதி கிடைக்கும் என உறுதியுடன் இறுக்கிறேன். உண்மை வெல்லும்போது மன்னிப்பு கேட்டால் போதும்’’ என்றார். நிதி மோசடி வழக்கில் ராபர்ட் வதேராவை கைது செய்ய நேற்று வரை டெல்லி நீதிமன்றம் தடை விதித்து இருந்தது. இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிமன்றம், இதை மார்ச் 2ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: