காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட 2 தமிழக வீரர்களுக்கு இறுதி அஞ்சலி

சென்னை: காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட 2 தமிழக வீரர்கள் உடல் அடக்கம் நேற்று அவர்களது சொந்த ஊரில் 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் நடந்தது. அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அதிகாரிகள், பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.  ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த 40 பேர் உயிரிழந்தனர். இதில் தமிழகத்தின் அரியலூர் மாவட்டம் , உடையார் பாளையம் தாலுகா கார்குடியை சேர்ந்த சின்னையன்-சிங்காரவள்ளி மகன் சிவசந்திரன் (33), தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அடுத்த சவலாப்பேரியை சேர்ந்த கணபதி-மருதம்மாள் மகன் சுப்பிரமணியன் (28) ஆகிய 2 பேரும் வீரமரணம் அடைந்தனர்.

தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு தமிழக வீரர்களின் உடல்கள் கொண்டுவரப்பட்டன.  பின்னர் சிவசந்திரனின் உடல், அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அங்கிருந்து மற்றொரு  விமானம் மூலம் மதுரை விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்ட சுப்பிரமணியனின் உடலுக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் அரசியல் கட்சியினர். காவல்துறை உயரதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து ராணுவ வாகனத்தில் சுப்பிரமணியனின் உடல் அவரது சொந்த ஊரான சவலாப்பேரி கிராமத்தில் உள்ள இல்லத்திற்கு நேற்று மதியம் கொண்டுவரப்பட்டது. அப்போது உடலை பார்த்து அவரது மனைவி கிருஷ்ணவேணி, பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள், கிராம மக்கள் கதறி அழுதனர். சுப்பிரமணியன் உடலுக்கு தமிழக அரசு சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.

 அமைச்சர்கள்  கடம்பூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜலட்சுமி, திமுக எம்எல்ஏக்கள் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், தங்கம்தென்னரசு, காங்கிரஸ் எம்எல்ஏ வசந்தகுமார், கலெக்டர் சந்தீப் நந்தூரி உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.  மயானத்திற்கு கொண்டுசெல்லப்பட்ட சுப்பிரமணியன் உடல், 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இறுதிசடங்கு நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கருப்பு பேட்ஜ் அணிந்து கலந்து கொண்டனர். இதையொட்டி சவலாப்பேரி கிராமமே சோகத்தில் மூழ்கியது.அரியலூர்: திருச்சி விமான நிலையம் வந்த சிவசந்திரன் உடல் வைக்கப்பட்டிருந்த சவப்ெபட்டி மீது தேசியக்கொடி போர்த்தப்பட்டது. தொடர்ந்து முப்படை வீரர்கள் சிவசந்திரன் உடலுக்கு மரியாதை செலுத்தினர்.

 இதையடுத்து மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஆனந்த குமார் ஹெக்டே ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி ெசலுத்தினர். பின்னர் அருகில் நின்றிருந்த சிவசந்திரனின் மைத்துனர் அருண், உறவினர்கள் ஜெயபால், குணவேலு, கண்ணன் ஆகியோருக்கு மத்திய அமைச்சர்கள் ஆறுதல் கூறினர். அவர்களை பார்த்து, உறவினர்கள் கதறி அழுதனர். தொடர்ந்து தமிழக பாஜ தலைவர் தமிழிசை, தமிழக அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, எம்பி குமார், திருச்சி கலெக்டர் ராஜாமணி, அரியலூர் கலெக்டர் விஜயலட்சுமி, திமுக எம்எல்ஏக்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஸ்டாலின் குமார், மற்றும் பாஜக நிர்வாகிகள் உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். முப்படை வீரர்கள் மற்றும் போலீசார் வீர வணக்கம் செலுத்தினர். ஆயிரக்கணக்கான பொது மக்கள், இளைஞர்கள் திரண்டு வந்து, கண்ணீர் மல்க அஞ்சலி ெசலுத்தினர். பின்னர் 12.30 மணியளவில் சிவசந்திரனின் உடல், ராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்டு சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்பட்டது.

திருச்சியில் இருந்து ராணுவ வாகனத்தில் கொண்டு வரப்பட்ட சிவசந்திரனின் உடல் மாலை 4.30 மணி அளவில் கார்குடி வந்து சேர்ந்தது. அங்கு அவரது வீட்டு முன் உறவினர்கள் ஒரு சில சடங்குகளை செய்த பின்னர் அருகில் உள்ள திடலில் அமைக்கப்பட்ட ஷாமியானா பந்தலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அப்ேபாது மத்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி விட்டு புறப்பட்டு சென்றார்.பின்னர் பேரிகார்டு தடுப்பில் பொதுமக்கள், உறவினர்கள் வரிசையாக சென்று சிவசந்திரன் உடலுக்கு வீர வணக்கம் ெசலுத்தினர். அதனை தொடர்ந்து வீட்டிற்கு பின்புறம் உள்ள அவர்களுக்கு சொந்தமான வயலில் ஏற்கனவே தயார் நிலையில் வைக்கப்பட்ட சமாதிக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் உடல் அடக்கம் நடந்தது. முன்னதாக சிவசந்திரன் சடலத்தின் மீது போர்த்தி இருந்த தேசியக் கொடியை மடித்து அவரது தந்தை சின்னையனிடம் ஐஜி வழங்கினார்.

20 லட்சம் காசோலை

அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், கொறடா தாமரை ராஜேந்திரன், கலெக்டர் விஜயலட்சுமி ஆகியோர் அரசு நிதி உதவி ₹20 லட்சத்துக்கான காசோலையை சிவசந்திரனின் மனைவி காந்திமதியிடம் வழங்கினர். மேலும் அவருக்கு அரசு சார்பில் நர்ஸ் பணி வழங்கப்படும் என்றும் உறுதி அளித்தனர். அப்போது காந்திமதி கண்ணீர் விட்டு கதறி அழுதார். இதேபோல, சுப்பிரமணியன் இறுதிசடங்கில் பங்கேற்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக அரசு சார்பில் 20 லட்சத்திற்கான காசோலையை சுப்பிரமணியன் மனைவி கிருஷ்ணவேணியிடம் வழங்கினார்.

நாட்டின் காவலுக்கு மகனை படிக்க வைப்பேன்

திருச்சி விமான நிலையத்தில் சிவசந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய தமிழக பாஜக தலைவர் தமிழிசை நிருபர்களிடம் கூறுகையில், என் மனதை நெகிழ வைத்தது அவரது அப்பாவும் குழந்தையும் ராணுவ உடை அணிந்திருந்தது. அவர்கள் இல்லத்தில் உணர்வு, உடை, உள்ளத்தில் தேசிய பற்று உள்ளது. அவரது மனைவி எனது மகனை ஐபிஎஸ் படிக்க வைப்பேன். எனது கணவர் போல் எனது மகனை நாட்டின் காவலுக்காக படிக்க வைப்பேன் என்றது என்னை நெகிழ வைத்தது. பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என தொண்டர்கள் கூறி வருகின்றனர். நமது நாடு பதிலடி கொடுக்க ஆரம்பித்துள்ளது என்றார்.

பாகிஸ்தானுக்கு எதிராக கோஷங்கள்

சிவசந்திரன் உடல் நேற்று விமானம் மூலம் திருச்சி கொண்டு வரப்பட்டது. பின்னர் ராணுவ வேனில் அவரது சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் கார்குடி கிராமத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. ஊருக்குள் ராணுவ வேன் சென்றவுடன் கிராமமக்கள் ஒன்று திரண்டு வந்தனர். அவர்கள் வேன் முன்னால் நடந்து பேரணியாக சென்றனர். அப்போது கிராம இளைஞர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக கோஷமிட்டனர்.

ராணுவ வீரர் உடையில்2 வயது மகன் அஞ்சலி

சிவசந்திரன் பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு வந்த போது தனது 2 வயது மகன் சிவமுனியனுக்கு ராணுவ வீரர் உடை வாங்கி கொடுத்தார். அந்த உடையை மகனுக்கு அணிந்து அழகு பார்த்தார். நேற்று சிவசந்திரன் உடல் அடக்கம் நடந்தபோது, சிவமுனியன் மற்றும் சிவசந்திரனின் தந்தை சின்னையன் ஆகியோர் ராணுவ வீரர் உடை அணிந்து இறுதி மரியாதை செய்த காட்சி அனைவரின் கண்களையும் கலங்க வைத்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: