பாஜக நெருக்கடிக்கு அதிமுக பணியுமா? தொகுதி பங்கீட்டில் இழுபறி; மீண்டும் பேச்சு நடத்த வருகிறார் பியூஷ் கோயல்

சென்னை: அதிமுக - பாரதிய ஜனதா கட்சிகளிடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பதால் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஓரிரு நாட்களில் சென்னை வர உள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக - பாரதிய ஜனதா கட்சி கூட்டணி உறுதியாகிவிட்டாலும், தொகுதி பங்கீடு குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. கடந்த வியாழக்கிழமை நள்ளிரவில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் முன்னிலையில் 3 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையிலும் தீர்வு காணப்படவில்லை. பாரதிய ஜனதா கட்சி 10-க்கும் மேற்பட்ட தொகுதிகளை கேட்கும் நிலையில் அதிமுக 8 தொகுதிகளுக்கு மேல் தர மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இரட்டை இலக்க எண்ணில் சீட் தர முடியாது. ஒற்றை இலக்க எண்ணில் தான் சீட் தர முடியும் என்று அதிமுக உறுதியாக கூறி விட்டது. அதுவும் நாங்கள் தரும் இடத்தில் தான் போட்டியிட வேண்டும். குறிப்பிட்டு தொகுதிகளை கேட்கக்கூடாது என்றது. அதிமுகவின் கண்டிஷனை கேட்டு பாஜ அதிர்ந்து போனது. ஆனால் சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதிமுக விரும்பும் தொகுதிகளையே பாஜகவும் கேட்பதால் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது.

இருப்பினும் ஓரிரு நாட்களில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடித்துவிடுவது என்பதில் பாஜக உறுதியுடன் உள்ளது. இதற்காக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மீண்டும் சென்னை வந்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு உறுதியானதும் கூட்டணியில் இடம்பெறும் கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்க 2 கட்சி தலைவர்களும் முடிவு செய்துள்ளனர். இதனால் அடுத்த வாரத்தில் அதிமுக கூட்டணி இறுதி வடிவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: