சென்னை விமான நிலையத்தில் 9.5 லட்சம் அமெரிக்க டாலர் பறிமுதல்

மீனம்பாக்கம்: சென்னையில் இருந்து துபாய் செல்லும் எமரேட் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று காலை 9.50 மணிக்கு புறப்பட தயாரானது. அதில் பயணம் செய்ய வந்த பயணிகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் பரிசோதித்து அனுப்பிக் கொண்டிருந்தனர். அப்போது, சென்னையை சேர்ந்த இப்ராஹிம் (34) என்பவர் சுற்றுலா பயணிகள் விசாவில் துபாய் செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்திருந்தார். அவர் கொண்டு வந்த சூட்கேசை சோதனை செய்தபோது, எதுவும் சிக்கவில்லை. ஆனால், அந்த வாலிபர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதனால், அவரை தனி அறைக்கு அழைத்துச்சென்று முழுமையாக பரிசோதித்த போது, அவரது பேன்ட் பாக்கெட்டில் கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர்களை மறைத்து வைத்திருப்பது தெரிந்தது.

அவற்றை பறிமுதல் செய்தனர். ஆனாலும், சந்தேகம் தீராததால், அவரது ஆடைகளை முழுமையாக களைந்து சோதனை செய்தபோது, ஆசனவாயில் கூம்பு வடிவில் ஒரு பார்சல் இருந்தது. அதை எடுத்து பார்த்தபோது அதிலும் அமெரிக்க டாலர் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது. அவரிடம் இருந்து மொத்தம் 9.5 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலரை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விசாரணையில், அது கணக்கில் வராத ஹவாலா பணம் என்றும், ஒருவர் இந்த பணத்தை கொடுத்து துபாயில் உள்ள அவரது நண்பருக்கு தரும்படி அனுப்பியதும் தெரியவந்தது. அவரை கைது செய்து, தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: