ரூ.31,287 கோடி நஷ்டத்தில் தள்ளாட்டம் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு மூடு விழா?: 67,000 பேருக்கு விஆர்எஸ் தர ரெடி

நஷ்டத்தில் தள்ளாடிக் கொண்டிருக்கும் பிஎஸ்என்எல் நிறுவனத்தை மூடுவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மீட்க  முடியாவிட்டால் மூடவும் தயார் என்ற நிலைக்கு மத்திய அரசு வந்துள்ளதால், பாதிப்பேரின் வேலை பறிபோகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. நலிவடைந்த பொதுத்துறை நிறுவனங்களை மீட்டெடுப்பது; முடியாவிட்டால் அவற்றை மூடி விடுவது என்ற முடிவில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை  செயல்படுத்தி வருகிறது. இந்த வகையில் நலிவடைந்த பொதுத்துறை நிறுவன பங்குகள் பல விற்பனை செய்யப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக தனியார் வசமாகி  வருகின்றன.தொலைத்தொடர்பு துறையில் கோலோச்சி வந்த மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனமும் இதற்கு தப்பவில்லை.  ஒவ்வொரு ஆண்டும் நஷ்டம் அதிகரித்துக்கொண்டே போகிறது. கடந்த 2017-18 நிதியாண்டு வரை இந்த நிறுவனத்துக்கு ரூ.31,287 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

 தொலைத்தொடர்பு துறை செயலாளர் அருணா சுந்தரராஜன் தலைமையிலான கூட்டத்துக்கு பிறகு மேற்கண்ட நஷ்ட அறிக்கையை சமர்ப்பித்திருக்கிறது  பிஎஸ்என்எல்.

இதில் நடத்தப்பட்ட ஆலோசனைகள் மற்றும் முடிவுகள் குறித்து மத்திய அரசு அதிகாரிகள் சிலர் கூறியதாவது: தொலைத்தொடர்பு துறையில் கட்டண போட்டியால் பல நிறுவனங்கள் தள்ளாடிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் பிஎஸ்என்எல் நிறுவனமும் கடும்  நஷ்டத்தை சந்தித்து வருகிறது. இதை மீட்க முடியுமா என்று யோசித்து வந்த மத்திய அரசு, தற்போது மூடவும் தயார் நிலைக்கு வந்து விட்டது.இதனால், பிஎஸ்என்எல்-ஐ மீட்க முடியுமா, அதற்கான வழிகள் என்ன என்ற திட்ட அறிக்கையை மட்டுமின்றி, மூடுவதாக இருந்தாலும் அதற்கான வழிகளை  சமர்ப்பிக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது. பிஎஸ்என்எல் சொத்து விற்பனை, பங்குகள் விற்பனை உட்பட அனைத்தும் இதில் அடங்கும்.  

 பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஊழியர்கள் எண்ணிக்கை ஏராளம். இதனால் நஷ்டம் அதிகமாகிறது என கருதுகிறது மத்திய அரசு. ஓய்வு வயதை 60ல் இருந்து  58ஆக குறைத்தால் சம்பள செலவு வரும் 2019-20  நிதியாண்டில் சுமார் ரூ.3,000 கோடி மிச்சமாகும்.  அல்லது விருப்ப ஓய்வு திட்டத்தையும் (விஆர்எஸ்) செயல்படுத்தலாம். இந்த வாய்ப்பை 56 வயதில் இருந்து 60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு அளிக்க வேண்டும்.  இந்த வயது பிரிவில் சுமார் 67,000 ஊழியர்கள் உள்ளனர். இவர்களில் 50 சதவீதம் பேராவது (சுமார் 33,846 பேர்) விஆர்எஸ்ஐ ஏற்றுக்கொண்டால், இதனாலும்  சம்பள செலவு ரூ.3,000 கோடி மிச்சமாகும். இவர்களுக்கு வழங்க வேண்டிய கருணைத்தொகை செலவு ரூ.6,900 கோடி வரை ஆகலாம். மீட்க முடியாவிட்டால ்இந்த வகையிலாவது செலவை குறைப்பது  என்ற திட்டத்துக்கு மத்திய அரசு வந்து விட்டது என்று தெரிவித்தனர்.

* பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு கடந்த 2017-18 நிதியாண்டு வரை இழப்பு ரூ.31,287 கோடி.

* இன்னமும் 4ஜி சேவை கூட தர முடியாமல் வாடிக்கையாளர்களை இழந்து வருகிறது.

* மிகப்பெரிய வேலை வாய்ப்பு அளித்த இந்த நிறுவனம் இன்று, சம்பளம் கொடுப்பதே சுமை என்று அரசு முடிவு செய்யும் அளவுக்கு நஷ்டத்தில் வீழ்ந்து விட்டது.

ரூ.15,000 கோடி சொத்துக்களை விற்கவும் தயார்

பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு நாடு முழுக்க ஏராளமான சொத்துக்கள் உள்ளன. முக்கிய இடங்களில் கட்டிடங்கள், நிலங்கள் உள்ளன. இவற்றின் மதிப்பு சுமார்  ரூ.15,000 கோடி உள்ளது. இவற்றை விற்பனை செய்தாலும் சரி. இந்த திட்டத்தை 2 அல்லது 3 ஆண்டுகளில் முதலீடு மற்றும் பொதுச்சொத்து நிர்வாக துறை  மூலம் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒரு காலத்தில் தரை வழி இணைப்பு சேவையில் தன்னிகரற்ற விளங்கியது பிஎஸ்என்எல். இலவச ரோமிங் முதன் முதலில் நடைமுறைப்படுத்தியதும்  பிஎஸ்என்எல்தான். தற்போது ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதே பெரிய சுமை என்ற நிலைக்கு பிஎஸ்என்எல் தள்ளப்பட்டு விட்டது. பொதுத்துறை  நிறுவனங்களின் மொத்த இழப்பில் பிஎஸ்என்எல் பங்களிப்பு மட்டும் 25 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: