இரானி கோப்பை கிரிக்கெட் முன்னிலை பெற கடும் போராட்டம்: விதர்பா 245/6

நாக்பூர்: இந்திர இந்திய அணியுடனான இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில், ரஞ்சி சாம்பியன் விதர்பா அணி முதல் இன்னிங்சில் முன்னிலை பெற கடுமையாகப் போராடி வருகிறது.நாக்பூர், விதர்பா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்று முதலில் பேட் செய்த இதர இந்திய அணி (ரெஸ்ட் ஆப் இந்தியா) 330 ரன் குவித்து ஆல் அவுட்டானது (89.4 ஓவர்). மயாங்க்  அகர்வால்  95 ரன், ஹனுமா விஹாரி 114 ரன் விளாசினர். விதர்பா பந்துவீச்சில் சர்வதே, வாக்கரே தலா 3, குர்பானி 2, யாஷ் தாகூர், கர்னிவார் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இரண்டாம் நாளான நேற்று, விதர்பா அணி முதல் இன்னிங்சை தொடங்கி விளையாடியது. கேப்டன் பைஸ் பஸல் - சஞ்சய் ரகுநாத் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 50 ரன் சேர்த்தது. பஸல் 27 ரன் எடுத்து வெளியேற, அடுத்து  வந்த அதர்வா டெய்டே 15 ரன்னில் ஆட்டமிழந்தார். பொறுப்புடன் விளையாடி அரை சதம் அடித்த சஞ்சய், 65 ரன் எடுத்து (166 பந்து, 9 பவுண்டரி) பெவிலியன் திரும்பினார்.

மோகித் காலே 1 ரன், கணேஷ் சதீஷ் 48 ரன் (105 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்), ஆதித்யா சர்வதே 18 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். இரண்டாம் நாள் ஆட்ட முடிவில், விதர்பா அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்  இழப்புக்கு 245 ரன் எடுத்துள்ளது.

அக்‌ஷய் வாத்கர் 50 ரன், அக்‌ஷய் கர்னிவார் 15 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இதர இந்தியா பந்துவீச்சில் கவுதம், தர்மேந்திரசிங் ஜடேஜா தலா 2, ராஜ்பூட், சாஹர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.கை வசம் 4 விக்கெட் இருக்க, விதர்பா அணி இன்னும் 85 ரன் பின்தங்கியுள்ளது. முதல் இன்னிங்சில் முன்னிலை பெற இரு அணிகளும் கடுமையாகப் போராடுவதால் இன்றைய ஆட்டம் மிகவும் சுவாரசியமாக அமையும் என  எதிர்பார்க்கப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: