நைஜீரியா அதிபரின் பிரசார பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 14 பேர் பலி

அபுஜா: நைஜீரியா நாட்டில் அதிபர் முகமது புஹாரி தலைமையில் நடைபெற்ற பிரசார பேரணியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 14 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் பலர் படுகாயமடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. நைஜீரிய நாட்டின் அதிபராக பதவி வகித்து வரும் முகமது புஹாரியின் 4 ஆண்டு பதவிக்காலம் முடிவடைய உள்ளது. இதனையடுத்து அந்நாட்டில் வரும் சனிக்கிழமை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் புஹாரி மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக முக்கிய போட்டியாளராக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில், நைஜீரியாவின் முன்னாள் துணை அதிபர் அட்டிக்கு அபுபக்கர் களமிறக்கப்பட்டுள்ளார்.

தேர்தலை முன்னிட்டு அதிபர் முகமது புஹாரி தலைமையில் பிரசார பேரணி நடத்தப்பட்டது. போர்ட் ஹார்கோர்ட் நகரின் தெற்கு பகுதியில் அமைந்திருக்கும் அதோக்கியே அமியெசிமகா மைதானத்தில் கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் புஹாரி பிரசாத்தில் ஈடுபட்டிருந்தார். அவரது பேச்சை தொடர்ந்து அவரை பார்ப்பதற்காக பாதியளவில் திறக்கப்பட்ட சிறிய கதவு வழியாக பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு சென்றனர். இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 14 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த பலர் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. நெரிசல் குறித்து அறிந்த அதிபர் முகமது புகாரி மிகுந்த வேதனையடைந்திருப்பதாக அதிபர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: