பழைய வீடுகளை விற்று புது வீடு வாங்கினாலும் வரிச்சலுகை பெறலாம்: வருமான வரித்துறை தீர்ப்பாயம் உத்தரவு

மும்பை: ஒன்றுக்கும் மேற்பட்ட  பழைய வீடுகளை விற்று புதிதாக ஒரு வீடு வாங்கினாலும் வரிச்சலுகை பெறலாம் என்று வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. ரியல் எஸ்டேட், பங்கு சந்தை அல்லது பங்கு சந்தை சார்ந்த முதலீட்டுகள் மூலமாக வரும் லாபத்திற்கு வரி விதிப்பதே நீண்ட கால மூலதன ஆதாய வரியாகும். இது ஒவ்வொரு முதலீடுகளுக்கு ஏற்றவாறு மாறும். ரியல்  எஸ்டேட்டை பொறுத்தவரை நிலம், வீடு வாங்கப்பட்ட 2 ஆண்டுக்கு பிறகு அதை விற்றால் கிடைக்கும் லாபத்துக்கு 20 சதவீத நீண்ட கால மூலதன ஆதாய வரி  விதிக்கப்படும். ஆனால், இந்த வரிவிதிப்பில் இருந்து தப்பிக்க, நிலம், வீடு விற்ற பணத்தை பயன்படுத்தி புதிதாக வீடு வாங்கினால்போதும் என்ற சலுகையும் உள்ளது. மும்பையை சேர்ந்த பிபின் சாகர் என்பவர் ஒரே கட்டிடத்தில் தனக்கு  சொந்தமான 3 பிளாட் வீடுகளை விற்றார். அதில் கிடைத்த பணத்தை பயன்படுத்தி வேறொரு பகுதியில் அதிக பரப்பளவு கொண்ட பிளாட் வீடு ஒன்றை வாங்கினார்.

இதற்காக, நீண்ட கால மூலதன ஆதாய வரி சலுகை கோரியபோது, ஒரு வீட்டை விற்றதற்கான லாபத்துக்கு மட்டுமே வரிசலுகை தரப்படும் என்று வருமானவரித்துறை அதிகாரி கூறிவிட்டார். ஒரே தளத்தில் 3 வீடுகள்  இருந்தாலும் ஒரு சமையலறையில் தான் சமையல் செய்து சாப்பிட்டோம். எனவே அதை ஒரே வீடாகதான் கருதி வரிச்சலுகை தர வேண்டும் என்று பிபின் சாகர் வருமான வரித்துறை மேல்முறையீடு தீர்ப்பாயத்தில் மனு  செய்தார். இதை விசாரித்த தீர்ப்பாயம், ஒன்றுக்கு மேற்பட்ட பழைய வீடு, சொத்துக்களை விற்று அதில் கிடைக்கும் பணத்தை பயன்படுத்தி ஒரே ஒரு வீடு வாங்கினாலும் வரிசலுகை உண்டு என்று உத்தரவிட்டுள்ளது. தீர்ப்பாயத்தின் இந்த  உத்தரவு வரலாற்று சிறப்புமிக்கது என்று ரியல் எஸ்டேட் துறை வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: