இரானி கோப்பை கிரிக்கெட் இதர இந்தியா 330 ரன் குவிப்பு: விஹாரி 114, மயாங்க் 85 ரன் விளாசல்

நாக்பூர்: ரஞ்சி சாம்பியன் விதர்பா அணியுடனான இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில், இதர இந்திய அணி முதல் இன்னிங்சில் 330 ரன் குவித்து ஆல் அவுட்டானது. நாக்பூர், விதர்பா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில் (பிப். 12-16), டாசில் வென்ற இதர இந்திய அணி (ரெஸ்ட் ஆப் இந்தியா) கேப்டன் அஜிங்க்யா ரகானே முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். தொடக்க வீரர்களாக மயாங்க் அகர்வால், அன்மோல்பிரீத் சிங் களமிறங்கினர். அன்மோல்பிரீத் 15 ரன் எடுத்து குர்பானி பந்துவீச்சில் கிளீன் போல்டானார். அடுத்து அகர்வாலுடன் ஹனுமா விஹாரி ஜோடி சேர்ந்தார். பொறுப்புடன் விளையாடிய இருவரும் 2வது விக்கெட்டுக்கு 125 ரன் சேர்த்தனர். சதத்தை நெருங்கிய நிலையில், அகர்வால் 95 ரன் (134 பந்து, 10 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி தாகூர் பந்துவீச்சில் குர்பானி வசம் பிடிபட்டார். அடுத்து வந்த ரகானே 13 ரன் மட்டுமே எடுத்து சர்வதே பந்துவீச்சில் சஞ்சய் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

ஷ்ரேயாஸ் அய்யர் 19 ரன்னில் வெளியேற, இஷான் கிஷன் 2 ரன், கவுதம் 7, தர்மேந்திர சிங் ஜடேஜா 6 ரன்னில் ஆட்டமிழந்து அணிவகுத்தனர். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், உறுதியுடன் போராடிய ஹனுமா விஹாரி சதத்தை நிறைவு செய்து அசத்தினார். அவர் 114 ரன் (211 பந்து, 11 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி சர்வதே பந்துவீச்சில் பஸல் வசம் பிடிபட்டார். சாஹர் 22 ரன், அங்கித் ராஜ்பூட் 25 ரன் எடுத்து பெவிலியன் திரும்ப, இதர இந்திய அணி முதல் இன்னிங்சில் 330 ரன் குவித்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது (89.4 ஓவர்). விதர்பா பந்துவீச்சில் சர்வதே, வாக்கரே தலா 3, குர்பானி 2, யாஷ் தாகூர், கர்னிவார் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இரண்டாம் நாளான இன்று விதர்பா அணி முதல் இன்னிங்சை தொடங்கி விளையாடுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: