ஆஸ்திரேலியாவுடன் டி20, ஒருநாள் தொடர் இந்திய அணி பிப். 15ல் தேர்வு

மும்பை: ஆஸ்திரேலிய அணியுடன் டி20 மற்றும் ஒருநாள் போட்டித் தொடரில் மோதவுள்ள இந்திய அணி தேர்வு நாளை மறுநாள் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி வரலாற்று சிறப்பு மிக்க வெற்றிகளைக் குவித்து அசத்தியது. இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் டி20 போட்டி விசாகப்பட்டணத்தில் பிப். 24ம் தேதியும், 2வது டி20 பிப். 27ம் தேதி பெங்களூருவிலும் நடைபெற உள்ளன. இதைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெறும். இந்த 2 தொடர்களுக்கான இந்திய அணி மும்பையில் நாளை மறுநாள் அறிவிக்கப்பட உள்ளது. எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான குழுவினர் வீரர்களைத் தேர்வு செய்கின்றனர். உலக கோப்பை போட்டித் தொடருக்கு முன்பாக இந்தியா விளையாடும் கடைசி சர்வதேச போட்டிகள் இவை என்பதால், வீரர்கள் தேர்வு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னணி வீரர்களுக்கு ஓய்வளிப்பது குறித்தும் தேர்வுக்குழுவினர் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் விராத் கோஹ்லிக்கு ஓய்வளிக்கப்பட்டது போல, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ரோகித் ஷர்மாவுக்கு ஓய்வளிக்கப்படலாம். அதே சமயம், ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற வாய்ப்பு கொடுத்துவிடக் கூடாது என்பதிலும் உறுதியாக உள்ளனர். இந்திய அணிக்கு எதிராக வெற்றி பெறுவது, நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணிக்கு உலக கோப்பையில் சிறப்பாக விளையாடுவதற்கான உத்வேகத்தை கொடுத்துவிடும் என்பதையும் தேர்வுக் குழுவினர் கவனத்தில் கொள்வார்கள். உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடிக்க அதிரடி வீரர்கள் ரிஷப் பன்ட், விஜய் ஷங்கர், தினேஷ் கார்த்திக் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவுகிறது. ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடும் இளம் வீரர்களும் கூட உலக கோப்பைக்கு தேர்வாகும் வாய்ப்பு உள்ளது என்று தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: