வெளிநாட்டு நிறுவனங்களில் மறைமுகமாக மேற்கொண்ட முதலீட்டை மறைத்தால் கடும் நடவடிக்கை: கண்காணிக்க வருமான வரித்துறை முடிவு

புதுடெல்லி: வெளிநாடுகளில் மேற்கொள்ளப்பட்ட மறைமுக முதலீடுகளை மறைக்கும் இந்திய முதலீட்டாளர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வருமான  வரித்துறை முடிவு செய்துள்ளது.வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணம் மீட்கப்படும் என பாஜ அரசு அறிவித்திருந்தது. இதற்கேற்ப, உச்ச  நீதிமன்ற உத்தரவுப்படி சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த குழு பரிந்துரைப்படிதான் கருப்பு பண மீட்பு சட்டம், பினாமி  சட்ட திருத்தங்கள் உள்ளிட்டவை கொண்டுவரப்பட்டன. இந்நிலையில், கருப்பு பணத்தை மீட்கும் மற்றொரு முயற்சியாக, புதிய நடவடிக்கையை வருமான  வரித்துறை மேற்கொள்ள இருக்கிறது.வெளிநாடுகளில் இந்தியர்களின் முதலீடு, பரிவர்த்தனைகளை பகிர்ந்து கொள்ள பல்வேறு நாடுகளுடன் ஒப்பந்தங்கள்  மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தியர்கள் பலர் வெளிநாட்டு நிறுவனங்கள் சிலவற்றில் முதலீடு செய்துள்ளனர். பெரும்பாலானவர்கள் தாங்கள் நேரடியாக  மேற்கொண்ட முதலீடு விவரங்களை வருமான வரித்துறையிடம் சமர்ப்பித்து விடுகின்றனர். ஆனால், மறைமுக முதலீடுகள் பெரும்பாலும் மறைக்கப்பட்டு  விடுகின்றன.

 வெளிநாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்த இந்தியரின் பணம், மற்றொரு வெளிநாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்ய பயன்படுத்தும்போது அது மறைமுக  முதலீடாக கருதப்படுகிறது. உதாரணமாக, துபாயை சேர்ந்த ஒரு நிறுவனத்தில் இந்தியர் ஒருவர் 15 சதவீத பங்குகள் வாங்கியுள்ளார் என்றால், இது நேரடி  முதலீடு எனப்படுகிறது. அதே நிறுவனம் மூலம் அமெரிக்காவில் உள்ள 3 நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டால் அதுசம்பந்தப்பட்ட இந்தியரின் மறைமுக  முதலீடாக கருதப்படுகிறது. வெளிநாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்த பங்குதாரராக இந்தியர், அந்த நிறுவனம் மூலம் மற்ற வெளிநாட்டு நிறுவனங்களில்  மேற்கொள்ளப்பட்ட முதலீடு விவரங்களையும் வருமான வரித்துறையிடம் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், மிக அதிக பணம் முதலீடு செய்த சிலர் இவற்றை  மறைத்துள்ளதாக வருமான வரித்துறை கருதுகிறது.

இதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட முதலீட்டை கண்டுபிடித்து, நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக வருமான வரித்துறை அதிகாரி ஒருவர்  தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், வெளிநாட்டில் மறைமுக வழியில் முதலீடு செய்து பங்குதாரராக மாறியவர் உரிய விவரங்களை சமர்ப்பிக்காவிட்டால்  அவருக்கு குறைந்தது ரூ.10 லட்சம் அபராதம் விதிக்க முடியும். கருப்பு பணத்தை மீட்கும் முயற்சியாக இதற்கான சட்ட திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.  வருமான வரி சட்டப்படி மறைமுக முதலீடு செய்தவர், மறைமுக முதலீடு செய்யப்பட்ட நிறுவனத்தின் பயன்பெறும் உரிமையாளராகவே கருதப்படுவார் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: