கூட்டுறவே நம் உயர்வு! அவசரத் தேவைகளுக்கு உதவும் புதுமையான crowd funding திட்டம்

உடல் நலக்குறைவு எப்போது எப்படி ஏற்படும்ன்னு நாம் கணிக்க முடியாது.ஆனால் -அச்சமயத்தில் நம்முடைய கையில் பணம் இருக்குமா என்பது கேள்விக் குறிதான்.மருத்துவச் செலவிற்காக நம்மில் எத்தனை பேர் தனியாக காப்பீடு எடுத்து வைத்து இருக்கிறோம்?அல்லது இதற்காக தனி சேமிப்பு ஏதாவது செய்து வருகிறோமா?90 சதவிகிதம் பேர் இல்லை என்றுதான் சொல்வோம். குறிப்பாக நடுத்தர மற்றும் அதற்கும் கீழ் வர்க்கத்தில் உள்ளவர்களுக்கு மருத்துவ செலவு என்று வரும் போது அவர்கள் கலங்கி தான் போகிறார்கள். இனி அந்த கவலை இல்லை. மருத்துவமோ  அல்லது குழந்தைகளின் படிப்புச் செலவோ, தொழில் துவங்குவதற்கோ எந்த ஒரு விஷயத்திற்கும் பணம் தேவை என்றால் கிரவுட் ஃபண்டிங் செய்யலாம் என்கிறார் அனூஜ் விஸ்வநாதன். இவர் மிலாப் என்ற இந்தியாவின் மிகப் பெரிய கிரவுட் ஃபண்டிங் நிறுவனத்தின் தலைவர் மற்றும் இணை நிறுவனர்.

‘‘நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் கோவையில். படிச்சதும் அங்கு தான். +2 முடிச்ச பிறகு எனக்கு சிங்கப்பூரில் உள்ள சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் படிக்க ஸ்காலர்ஷிப் கிடைச்சது. அதனால் நான்கு வருஷம் 2005 முதல் 2009ம் ஆண்டு வரை அங்கு படிச்சேன். அங்கு நான் தேர்வு செய்த பாடம் பொறியியல் மற்றும் பொருளாதாரம் துறையை தேர்வு எடுத்து படிச்சேன். படிப்பு முடிச்ச கையோட இந்தியாவிற்கு வந்தேன். இங்கு எனக்கு ஒரு மைக்ரோ பினான்ஸ் நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கும் வாய்ப்பு கிடைச்சது. 2009ல் படிப்பு முடிஞ்சது. அங்கு தான் படிப்புக்காக, மருத்துவத்திற்காக, தொழில் துவங்குவதற்காக. இன்னும் பல அத்தியாவசிய தேவைக்கு எவ்வாறு உதவ முடியும் என்று தெரிந்துக் கொண்டேன். அதன் பிறகு இதையே நாம் ஏன் தனியா செய்யக்கூடாதுன்னு தோணுச்சு’’ என்பவர் 2010ல் மிலாப் கிரவுட் ஃபண்டிங் நிறுவனத்தை துவங்கியுள்ளார்.

“கிரவுட் ஃபண்டிங் என்றால் என்ன?”

“கிரவுட் ஃபண்டிங் பெயர் தான் புதுசு. ஆனால் அதில் உள்ள செயல்பாடு பழசு தான். ஒரு அவசரத் தேவை அதாவது பிள்ளைகளுக்கு கல்விக் கட்டணம் அல்லது மருத்துவச் செலவு என்று எடுத்துக் கொள்வோம். அது ஒரு பெரிய தொகையாக இருக்கும் பட்சத்தில் முதலில் நம்முடைய சேமிப்பில் உள்ள தொகையை திரட்டுவோம். அது பத்தாத பட்சத்தில் தெரிந்தவர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் உதவி கேட்போம். பலரிடம் இருந்து தொகையினை திரட்டி நம்முடைய தேவைகளை நிறைவேற்றுவோம். இது தான் கிரவுட் ஃபண்டிங். இதை தான் நாங்க செய்கிறோம். என்ன உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் இல்லாமல் தெரியாதவர்கள் என பல பேர் ஒருவரின் தேவைக்கு உதவி செய்வது தான் கிரவுட் ஃபண்டங்”

“மிலாப் எப்படி செயல்படுகிறது?”

“மிலாப் இணையம் வழியாக தான் செயல்பட்டு வருகிறது. முதலில் பிரச்னை உள்ளவர்கள் அவர்களின் தேவை என்ன என்று எங்களின் இணையத்தில் வெளியிட வேண்டும். இணையத்தை இயக்க தெரியாதவர்கள் எங்களின் வாட்ஸ்சப் எண் மூலம் தொடர்பு கொள்ளலாம். அதை குறித்து நாங்க எங்களின் இணையத்தில் வெளியிடுவோம். அதைப் பார்த்து எங்களின் உறுப்பினர்கள் உதவ முன்வருவார்கள். உதவி செய்வதற்கு ஒரு குறிப்பிட்ட தொகை தான் செலுத்த வேண்டும் என்றில்லை. அவர்கள் விரும்பும் தொகையை செலுத்தலாம். அது ரூ.100ஆக கூட இருக்கலாம். அல்லது 5000 ரூபாயாக கூட இருக்கலாம். அவரவர் வசதி மற்றும் தேவைக்கு ஏற்ப தொகையை செலுத்தினால் போதும். யாரையும் கட்டாயப் படுத்துவதில்லை. விரும்பியவர்கள் தொகை செலுத்தலாம். இந்த கிரவுட் பண்டிங் கடன் கிடையாது. உதவி தொகையாக தான் கொடுக்கிறோம். இந்த தொகையை பெற்றவர்கள் திரும்பி தர வேண்டும் என்று அவசியம் இல்லை. அதாவது மிலாப் என்பது ஒரு பிளாட்பார்ம் தான். தேவை உள்ளவர்களுக்கு இருப்பவர்கள் கொடுத்த உதவ நாங்க ஒரு பாலமாக செயல்பட்டு வருகிறோம்”

“மிலாப்பின் பயணம்?”

“மிலாப் பொருத்தவரை இரண்டு விதமான பயணம்ன்னு ெசால்லலாம். நாங்க ஆரம்பித்த போது கிராமத்தில் உள்ள மக்களின் தேவையை குறித்து செயல்பட்டு வந்தோம். அங்குள்ள மக்களின் கல்வி, சிறு தொழில் துவங்குவதற்கு ஏற்ப தான் மிலாப் ஆரம்பகட்டத்தில் உதவி செய்து வந்தது. அந்த சமயத்தில் பெரும்பாலானவர்கள் மருத்துவ உதவியை அதிகம் எதிர்பார்க்கிறார்கள் என்று தெரியவந்தது. காரணம் மருத்துவச் செலவு நாம் எதிர்பார்க்காத ஒன்று. அந்த சமயத்தில் நம் கையில் உள்ள சேமிப்பு எல்லாம் கரைந்து போகும். மருத்துவ காப்பீட்டு வசதியும் இருக்காது. மருத்துவச் செலவுக்கு மட்டுமே உதவி செய்வார்களா என்று பலர் எதிர்பார்த்தனர். அந்த எதிர்ப்பார்ப்பு தான் அவசர மருத்துவ உதவி ஏன் நாம் மக்களுக்கு செய்யக்கூடாதுன்னு எண்ணம் ஏற்பட்டது. அதன் படி 2014 முதல் மருத்துவ உதவிக்கு அதிக கவனம் செலுத்த ஆரம்பிச்சோம். மிலாப் ஆரம்பித்த எட்டு வருடத்தில் இது வரை 500 கோடி ரூபாய்க்கு மேல் உதவி தொகை கொடுத்து உதவி இருக்கிறோம். மிலாப்பில் மருத்துவ உதவி மட்டும் இல்லை. எல்லா விதமான பணப்பிரச்னை... அதாவது கல்வி உதவி, சிறு தொழில் துவங்கவும் உதவி செய்கிறோம். ஆனால் மருத்துவ உதவிக்கு உடனடியாக அதிக கவனம் செலுத்தி வருகிறோம்.”

“மிலாப்பை எவ்வாறு அணுகலாம்?”

“நான் ஏற்கனவே சொன்னது போல் தான் இணையம் அல்லது வாட்ஸ்அப் மூலம் அணுகலாம். ஆனால் கிராமபுற மக்களுக்கு தொழில்நுட்பம் பெரிய அளவில் தெரியாது என்பதால், அவர்கள் மருத்துவமனை மூலமாக எங்களை தொடர்பு கொள்ளலாம். நாங்க சுமார் 300 மருத்துவமனைகளுடன் தொடர்பில் இருக்கிறோம். அதனால் எங்களின் பிரதிநிதிகள் அந்தந்த மருத்துவமனையில் உள்ளனர். அவர்களை நேரடியாக தொடர்பு கொள்ளலாம். பணம் சம்மந்தப்பட்ட விஷயம் என்பதால், அவர்களின் தேவை உண்மைதானா என்று முதலில் ஆய்வு செய்வோம். அதன் பிறகு அது குறித்து எங்களின் இணையத்தில் வெளியிடுவோம். விருப்பம் உள்ளவர்கள் உதவி செய்ய முன்வருவார்கள். தற்போது 12 லட்சம் பேர் உதவி செய்துவருகிறார்கள். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு தான் இருக்குமே தவிர குறையாது.

ஆன்மிகம் மற்றும் அரசியல் சார்ந்த விஷயங்களுக்கு நாங்க உதவுவது இல்லை. மேலும் மிலாப் மட்டுமே ஒருவரின் முழு பிரச்னைக்கான தீர்வு என்று சொல்லிட முடியாது. காரணம் எங்க மூலமாக 12 லட்சம் பேர் இருந்தாலும், அனைவருமே உதவி செய்வார்கள் என்று சொல்லிட முடியாது. ஏன் சில சமயம் 1000 பேர் மட்டுமே உதவி செய்ய முன்வந்திருப்பார்கள். அதனால் ஒரு வருக்கு ரூ2 லட்சம் தேவை என்றால் மிலாப் மூலம் ஒரு லட்ச ரூபாய் மட்டுமே திரட்ட முடியும் பட்சத்தில் மீதி பணத்தை அவர்கள் ஏற்பாடு செய்துக் கொள்ள வேண்டும். காரணம் இது கிரவுட் ஃபண்டிங் எவ்வளவு தொகை வரும் என்பது நாம் திட்டமிட்டு சொல்லிட முடியாது. ஒரு முறை நான்கு வயத குழந்தை விபத்தில் அடிப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் இருந்த போது அந்த குழந்தைக்கு மருத்துவச் செலவிற்கு மட்டுமே 20 லட்சம் ரூபாய் மிலாப் மூலம் உதவி வழங்கினோம். இது எல்லாவற்றிக்கும் சாத்தியம் என்று சொல்லிட முடியாது.”

“மிலாப்பில் 12 லட்ச உறுப்பினர்கள் எவ்வாறு சாத்தியமானது?”

“நம்பிக்கைதான் எல்லாம். அந்த நம்பிக்கையை நாங்க மக்கள் மனதில் பதிய வைத்துவிட்டோம். 2010ல் முதலில் துவங்கிய போது, சிங்கப்பூரில் தான் உதவிக்கான பிரச்சாரத்தை துவங்கினோம். ஒன்றரை லட்ச ரூபாய் தான் எங்களின் முதல் டார்கெட். முதல் டார்கெட் என்பதால் என் நண்பர்கள், உறவினர்கள் எல்லாம் உதவினார்கள். 30 நபர்கள் என துவங்கி 5000 பிறகு இப்போது 12 லட்சம் பேர் உதவ முன்வந்துள்ளனர். எங்க குழுவின் வேலை, ஒருவரின் தேவையை எவ்வாறு நிரப்ப வேண்டும் என்பது தான். பெரிய அளவில் இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு உதவியை நாடி இருந்தால், அதற்கான பிரச்சாரம் எங்க உறுப்பினர் 12 லட்சம் பேரையும் தாண்டி மற்றவரையும் எவ்வாறு அணுகுவதுன்னு யோசிப்போம்.

உதவி தொகையை இருகட்டமாக தேவையானவர்களுக்கு சென்றடையும். எங்களுக்கு ேநாடல் அக்கவுண்ட் உள்ளது. அதில் தான் எல்லாரும் உதவி தொகையை செலுத்துவார்கள். நாங்கள் நேரடியாக மருத்துவமனைக்கு அந்தத் தொகையை செலுத்திடுவோம். அப்படி இல்லாத பட்சத்தில் அவர்களின் வங்கி கணக்கில் செலுத்துவோம். செலுத்திவிட்டு நாங்க கைகளை கட்டிக் கொண்டு இருப்பதில்லை. அந்த பணத்தை அவர்கள் சரியான முறையில் செலவு செய்கிறார்களா என்று எங்களின் பிரதிநிதிகள் கண்காணிப்பார்கள். அது மட்டும் இல்லாமல், உதவி செய்தவர்களுக்கு அது குறித்து அப்டேட் அவ்வப்போது தெரிவிக்கப்படும்.”

“அடுத்தக் கட்டத் திட்டம்?”

“தற்போது மிலாப் அனைத்து மெட்ரோ நகரங்கள் உட்பட மற்ற நகரத்தை சேர்த்து சுமார் 50 இடங்களில் செயல்பட்டு வருகிறது. இதை தவிர தமிழ்நாட்டில் கோவை, சேலம், மதுரை... போன்ற நகரத்திலும் செயல்படுத்தும் எண்ணம் உள்ளது. இணையத்தில் ஆங்கிலத்தில் இருப்பதால் ஆங்கிலம் தெரியாதவர்களுக்கு அது பயன்படாமல் போக வாய்ப்புள்ளது. அவர்கள் தங்களுக்கு தெரிந்த எந்த மொழியிலும் வாய்ஸ் செய்தியாக பதிவு செய்யலாம். அதை நாங்க ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்து எங்களின் இணையத்தில் அப்லோட் செய்வோம். இதன் மூலம் உதவி செய்வதற்கு மொழி ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பது எங்களின் நோக்கம். தமிழ்நாட்டில் மட்டும் இல்லாமல் இந்தியா முழுக்க உதவி செய்யும் எண்ணம் உள்ளது. அதற்கு ஏற்ப மிலாப்பை பரந்து விரிவடைய செய்யும் திட்டம் உள்ளது. அதற்கான வேலையில் தற்போது மும்முரமாக ஈடுபட்டு வருகிறோம்.’’

- ப்ரியா

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: