திருப்பரங்குன்றம் கோயிலில் அமைச்சர் பதவிக்காக அதிமுக எம்எல்ஏ யாகம்?

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அதிமுக எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம், அமைச்சர் பதவிக்காக யாகம் நடத்தியதாக கூறப்படுகிறது.  மதுரை அருகே திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் நேற்று காலை  பெருந்துறை தொகுதி அதிமுக எம்எல்ஏவும், சட்டமன்ற  நிதி மதிப்பீட்டுக்குழு தலைவருமான தோப்பு வெங்கடாசலம்  ‘கந்த யாகம்’ எனும் சிறப்பு யாகத்தில் ஈடுபட்டார். இது பதவி, அதிகார வாழ்க்கை மேம்பாட்டுக்கான சக்தி தரும் யாகம் என கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இளைஞர் நலன்  மற்றும் விளையாட்டு நலத்துறை அமைச்சராக இருந்த பாலகிருஷ்ண ரெட்டி சிறை தண்டனை பெற்றதால், காலியாக உள்ள அவருடைய பதவியை தற்போது அமைச்சர் செங்கோட்டையன் கூடுதலாக கவனித்து வருகிறார். அந்த துறைக்கான  அமைச்சர் பதவி பெற, தோப்பு வெங்கடாசலம் இந்த யாகம் நடத்தியதாக பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த பதவிக்கு ஏற்கனவே மதுரை அதிமுக எம்எல்ஏ ஒருவர் குறிவைத்து காய்களை நகர்த்தி வருகிறார். தற்போது தோப்பு வெங்கடாசலம் யாகம் நடத்திய சம்பவம், உள்ளூர் எம்எல்ஏ ஆதரவாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக, ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது 2012ல் அமைச்சராக இருந்த செங்கோட்டையன் வகித்து வந்த வருவாய்த்துறையை  ஜெயலலிதா பறித்து, தோப்பு வெங்கடாசலத்திடம் ஒப்படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு டிடிவி.தினகரன் அணிக்கு  சென்று, மீண்டும் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டவர். தற்போது  தனியாக யாகம் செய்வது தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: