ரவுடியை வழக்கில் இருந்து விடுவிக்க ரூ.20 லட்சம் லஞ்சம் கேட்ட விவகாரம்: உதவி கமிஷனர் முத்தழகு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ரெய்டு

சென்னை: ரவுடி ராக்கெட் ராஜாவை வழக்கில் இருந்து விடுவிக்க ரூ.20 லட்சம் லஞ்சம் கேட்ட விவகாரத்தில் உதவி கமிஷனர் முத்தழகு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கிடைத்த சொத்து ஆவணங்களை வைத்து அவரிடம் 6 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. ராமநாதபுரம் சமஸ்தான சேதுபதி மன்னர் வாரிசான கார்த்திக் சேதுபதியை, சொத்துக்காக சிங்கம்பட்டி ஜமீன் தங்கூர் மஹாஜன் தூண்டுதலின் பேரில் கூலிப்படையினர் கடத்தினர். பின்னர் அவரை துப்பாக்கி முனையில் மிரட்டி, சென்னை கே.கே.நகரில் உள்ள வீட்டில் இருந்த அவரது மனைவியிடம் செல்போனில் பேச வைத்து ரூ.40 லட்சம் மதிப்புள்ள தங்கம், வைர நகைகள் கொள்ளைடிக்கப்பட்டது.

மேலும், கார்த்திக் சேதுபதிக்கு விஷஊசி போட்டு அவரை உடல் ரீதியாக கூலிப்படையினர் பாதிப்பை ஏற்படுத்தினர். இதுகுறித்து கார்த்திக் சேதுபதி போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனை சந்தித்து சம்பவம் குறித்து புகார் அளித்தார். அதன்படி கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கார்த்திக் சேதுபதியை கடத்திய வழக்கில் ரவுடி ராக்கெட் ராஜா பின்னணியில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ராக்கெட் ராஜா மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.

இதற்கிடையே கடந்த ஆண்டு மே 6ம் தேதி இரவு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் ரவுடி ராக்கெட் ராஜா தனது நண்பர்களுடன் தங்கி இருப்பதாக சென்னை ரவுடிகள் ஒழிப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே ராக்கெட் ராஜாவை கைது செய்ய அப்போது தேனாம்பேட்டை உதவி கமிஷனராக இருந்த முத்தழகுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி உதவி கமிஷனர் முத்தழகு மற்றும் ரவுடிகள் ஒழிப்பு பிரிவு போலீசார் தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த ராக்கெட் ராஜாவை துப்பாக்கி முனையில் சுற்றிவளைத்து கைது செய்தனர்.

ரவுடி ராக்கெட் ராஜாவிடம் இருந்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டது. ராக்கெட் ராஜா உடன் தங்கி இருந்த ராமநாதபுரம் சமஸ்தானம் சேதுபதி மன்னரின் வாரிசான கார்த்திக் சேதுபதியை கடத்திய வழக்கில் முக்கிய குற்றவாளியான வடக்கு பாலபாக்கியம் நகரைச் சேர்ந்த சுந்தர் (31), பிரகாஷ் (25), மேற்கு தாம்பரம் சாஷசாய் நகரைச் சேர்ந்த நந்த குமார் (43), பாளையங்கோட்டை திருநகர் என்ஜிஓ காலனியைச் சேர்ந்த ராஜ் சுந்தர் (23) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணைக்கு பிறகு ரவுடி ராக்கெட் ராஜா மற்றும் ஆதரவாளர்கள் உட்பட 5 பேரையும் சிறையில் அடைத்தனர்.

அதன்பிறகு ஒரு வாரம் கழித்து ராக்கெட் ராஜா ஆதரவாளர்கள் ஆடியோ ஒன்று வெளியிட்டனர்.  அந்த ஆடியோவில், உதவி கமிஷனர் முத்தழகு, கார்த்திக் சேதுபதி வழக்கில் இருந்து ராக்கெட் ராஜாவை விடுவிக்க வேண்டும் என்றால் ரூ.20 லட்சம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளார். ஆனால் ராக்கெட் ராஜா ஆதரவாளர்கள் ரூ.5 லட்சம் மட்டும் தான் கொடுக்க முடியும் என்று கூறினர். அதற்கு உதவி கமிஷனர் முத்தழகு ரூ.5 லட்சம் டீ செலவுக்கு தான் சரியாக இருக்கும் என்று பேரம் பேசி இருந்தார். இந்த ஆடியோ போலீசாரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைதொடர்ந்து உதவி கமிஷனர் முத்தழகை போலீஸ் கமிஷனர் ஏ.ேக.விஸ்வநாதன் அதிரடியாக பணியில் இருந்து இடமாற்றம் செய்து உத்தரவிட்டார். தற்போது ஆவடி 5வது ஆயுதப்படை பட்டாலியன் உதவி கமாண்டன்டாக முத்தழகு பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், வழக்கில் இருந்து ரவுடி ராக்கெட் ராஜாவை விடுவிக்க லஞ்சம் கேட்ட வழக்கில்  ஆடியோ  ஆதாரங்களை வைத்து முத்தழகு மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கடந்த 11ம் வழக்கு பதிவு செய்தனர். அதைதொடர்ந்து நேற்று காலை 7 மணிக்கு அண்ணாநகரில் உள்ள காவல் துறை அதிகாரிகள் குடியிருப்பில் வசித்து வரும் முத்தழகு வீட்டில் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி லவகுமார் தலைமையிலான 7 பேர் அதிரடியாக சோதனை நடத்தினர்.  இந்த சோதனையின் போது முத்தழகு வீட்டில் தான் இருந்தார். அவரிடம் இருந்து செல்போன் பறிமுதல் ெசய்யப்பட்டது. சோதனையின் போது வீட்டில் இருந்து யாரையும் வெளியே செல்ல போலீசார் அனுமதிக்க வில்லை.

அதேபோல் வெளியில் இருந்த வீட்டிற்குள் வர யாரையும் போலீசார் அனுமதிக்க வில்லை. இந்த சோதனை பகல் 1 மணி வரை நீடித்தது.

 முத்தழகு உதவி கமிஷனராக இருந்த அவரது பணி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததற்கான ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. மேலும், அவரது வங்கி கணக்கிலும் பல லட்சம் ரூபாய் பணம் பறிமாற்றம் செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் கிடைத்ததாகவும் கூறப்படுகிறது.  6 மணி நேரம் நடந்த தொடர் சோதனையில் கிடைத்த ஆவணங்களை வைத்து உதவி கமிஷனர் முத்தழகுவிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேரடியாக விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் அவர் அளித்த பதிலை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர். சோதனையில் கிடைத்த ஆவணங்கள் அனைத்தையும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், ரவுடி ராக்கெட் ராஜாவை விடுவிக்க லஞ்சம் பெற்றதற்கான ஆதாரங்களும் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ரவுடியை விடுவிக்க லஞ்சம் பெற்றதாக உதவி கமிஷனர் ஒருவர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தப்பட்டு வரும் சம்பவம் போலீசாரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: