சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள நகைக்கடைகளில் ஐ.டி ரெய்டு

சென்னை: சென்னை புறநகரில் உள்ள பல்வேறு நகைக் கடைகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.சென்னை புறநகர் பகுதியான  கேளம்பாக்கத்தில் புக்ராஜ் ஜெயின் என்பவருக்கு சொந்தமான பிரகாஷ் தங்க  மாளிகை, அவரது சகோதரர் சுரேஷ்குமார் ஜெயின் என்பவருக்கு சொந்தமான ராகுல்  தங்க மாளிகை மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான ராசி ஜூவல்லரி, அம்பிகா  ஜூவல்லரி ஆகியவை உள்ளன. அதேபோன்று கேளம்பாக்கம் காவல் நிலையம் எதிரில்  செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமான சித்ரா ஜூவல்லரி என்ற நகைக்கடையும்  உள்ளது. இந்நிலையில் தாம்பரம் வருமான வரித்துறை அலுவலகத்தைச் சேர்ந்த  20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நேற்று பகல் 12 மணி முதல் மேற்கண்ட ஐந்து  கடைகளிலும் திடீர் சோதனை நடத்தினர்.கடைகளில் வைக்கப்பட்டிருந்த நகைகளை  வாங்கியது குறித்தும், அதற்கான ரசீது உள்ளதா, நகைகள் கணினி ரசீது மூலம் வழங்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறதா, அவற்றிற்கு முறையாக கணக்கு  பராமரிக்கப்படுகிறதா என்று ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த கடைகளுக்கு  தொடர்ச்சியாக வாடிக்கையாளர்கள் வரவே கடைக்கு வெளியே இன்று கடை விடுமுறை  என்றும் இன்று விற்பனை கிடையாது என்றும் கையால் எழுதி ஒட்டி  வாடிக்கையாளர்களை திருப்பி அனுப்பினர்.

இந்த திடீர் ஆய்வு குறித்து வருமான  வரித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘வழக்கமாக நடைபெறும் ஆய்வுதான் என்றும்  எவ்வளவு பணம், நகைகள் கணக்கில் காட்டப்படாமல் உள்ளது, என்று தெரிவிக்க  முடியாது என்றும் கூறினர். செய்தியாளர்கள் வந்ததையடுத்து அனைத்து  நகைக்கடைகளின் ஷட்டர்களையும் மூடி சோதனையை தொடர்ந்தனர். அதேபோன்று  கேளம்பாக்கம் புக்ராஜ் ஜெயினின் உறவினர் பிரகாஷ் ஜெயின் என்பவருக்கு  சொந்தமான பிரகாஷ் கோல்ட் ஹவுஸ் என்ற நகைக்கடை கல்பாக்கத்தில் உள்ளது.  அங்கும் இதே போன்று திடீர் சோதனை நடைபெற்றது. மேலும், கோவளத்தில் உள்ள ஒரு  நகைக்கடையிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. ஒரே நபரை குறிவைத்து  அவரது கடை மற்றும் உறவினர் கடைகளில் வருமான வரித்துறை ஆய்வு மேற்கொண்டது  பரபரப்பை ஏற்படுத்தியது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: