இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் ‘ஸ்மார்ட் கார்டு’ வடிவில் டிரைவிங் லைசென்ஸ் அறிமுகம்

சென்னை: இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னையில் ‘ஸ்மார்ட் கார்டு’ வடிவிலான டிரைவிங் லைசென்ஸ் வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னை, திருவான்மியூரில் வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இங்கு நேற்று நாட்டிலேயே முதன்முறையாக, ‘ஸ்மார்ட் கார்டு’ வடிவிலான டிரைவிங் லைசென்ஸ், வாகன பதிவு சான்றிதழ் மற்றும் போக்குவரத்துத் துறையின் புதிய இணையதளம் ஆகியவற்றை துவங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவங்கி வைத்தார். இதில், போக்குவரத்துத்துறை ஆணையர் சமயமூர்த்தி, திருவான்மியூர் ஆர்.டி.ஓ யுவராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். ஸ்மார்ட் கார்டு வடிவிலான லைசென்ஸ், பதிவுச்சான்று வழங்கும் திட்டத்தை துவக்கி வைக்கும் அடையாளமாக, நரேஷ், ராஜேந்திரன், ஆர்த்தி, ராதிகா, தேவி உள்ளிட்டோருக்கு அமைச்சர் புதிய ஸ்மார்ட் கார்டுகளை வழங்கினார். முன்னதாக, அவர் பேசியதாவது:

நாட்டில் முதன்முறையாக ஸ்மார்ட் கார்டு வடிவிலான லைசென்ஸ், வாகன பதிவு சான்றிதழ் திருவான்மியூரில் துவங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த கார்டுகளை ேபாலியாக தயாரிக்க முடியாது. அதில் பதிவு செய்யப்பட்டிருக்கும் தகவல்களை அழிக்க முடியாது. இதில் மைக்ரோ சிப் பொருத்தப்பட்டுள்ளதால், புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகளை செய்யும் போது கூடுதல் தகவல்களை எளிதாக பதிவேற்றம் செய்துகொள்ள முடியும்.

இந்த கார்டில் ‘கில்லோயிச்’ முறை நுண் எழுத்துக்கள், ‘ஹாலோகிராம்’, ‘யூ வி இமேஜ்’, ‘க்யூ ஆர் கோட்’, ‘எம்பெட்டெட் சிப்’ போன்ற உயர்தர பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விவரங்களை உடனுக்குடன் பதிவிறக்கும் செய்துகொள்ளும் வகையில் ‘க்யூ ஆர் கோட்’ உடன் கூடிய ஸ்மார்ட் கார்டு இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இதில் கிரெடிட் கார்டுகளுக்கு இணையான பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த கார்டு கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு, சோதனை முடிந்து ஒரு மணி நேரத்தில் வழங்கப்படும். இதனால் அலுவலகங்களில் பொதுமக்கள் காத்திருக்கும் நேரம் குறையும். இந்த முறை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள, 24 அலுவலகங்களில் செயல்படுத்தப்படுகிறது. மேலும் படிப்படியாக அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும். அதேபோல் புதிய இணையதளம் (https://tnsta.gov.in) எளிய முறையில் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களை சிசிடிவி கேமரா மூலம் கண்டறியும் திட்டம் திருச்சி - செங்கல்பட்டு இடையே செயல்படுத்தப்படும். காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில், 200 பேட்டரி பஸ்களும், 10 ஆயிரம் பி.எஸ்.6 தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட பஸ்கள் வாங்கப்படும்  என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: