தீவிரவாதிகள் அச்சுறுத்தல் எதிரொலி தமிழக கடலோர மாவட்டங்களில் 34 மணி நேர பாதுகாப்பு ஒத்திகை: ஹெலிக்காப்டர், ரோந்து கப்பல்கள் மூலம் தீவிர கண்காணிப்பு

சென்னை: குடியரசு தினத்தில் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் விடுத்துள்ளதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள 13 கடலோர மாவட்டங்களில் கடற்படையுடன் கடலோர காவல் படையினர் 34 மணி நேரம் கூட்டு பாதுகாப்பு ஒத்திகை நடத்தி வருகின்றனர்.

குடியரசு தினம் வரும் 26ம் தேதி நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. விழாவை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக உள்துறை அமைச்சகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அனைத்து மாநில உள்துறை செயலாளர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்திலிருந்து பாதுகாப்பு குறித்து அவசர சுற்றறிக்கை ஒன்று கடந்த வாரம் அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கடல் வழியாக தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த கூடும் என்று அச்சுறுத்தல் இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து நாடுமுழுவதும் உள்ள கடலோர மாநிலங்களில் நேற்று காலை 8 மணி முதல் இன்று மாலை 6 மணி வரை கடற்படை மற்றும் கடலோர காவல் படை, கடலோர பாதுகாப்பு குழுமம், வனத்துறை, சுங்கத்துறை சார்பில் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கி நடந்து வருகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை கடலோர பாதுகாப்பு குழுமம் கூடுதல் டிஜிபி வன்னியபெருமாள் தலைமையில் கடலோர காவல் படை, கடற்படை, சுங்கத்துறை, வனத்துறை, உள்ளூர் போலீசார் திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், நாகை உட்பட 13 கடலோர மாவட்டங்களில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வழக்கமாக “கடல் கவசம்” என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. ஆனால் இந்த ஆண்டு “ஷி விஜில்” என்ற பெயரில் நாடு முழுவதும் நடந்து வருகிறது. 34 மணி நேரம் நடைபெறும் இந்த பாதுகாப்பு ஒத்திகையில், போலீசாரே தீவிரவாதிகள் மற்றும் மீனவர்கள் போல் வேடம் அணிந்து டம்மி வெடிகுண்டுகள், துப்பாக்கிகளுடன் கடல் வழியாக படகுகள் மூலம் ஊடுருவார்கள். அவர்களை தடுக்க கடற்படை வீரர்கள் மற்றும் கடலோர காவல் படை மற்றும் கடலோர பாதுகாப்பு குழுமம் போலீசார் ஹெலிக்காப்டர், கப்பல்கள் மற்றும் படகுகள் மூலம் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்களின் படகுகளிலும் அதிரடியாக வழிமறித்து சோதனை நடத்தப்பட்டது. அதேபோல் சந்தேகத்திற்கு இடமான வகையில் யாரேனும் படகுகளில் வந்தால் அவர்கள் குறித்து தகவல் தெரிவிக்கவும் மீனவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடலோர பகுதிகளில் உள்ளூர் ேபாலீசார் உதவியுடன் தீவிர பாதுகாப்பு பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: