வரதராஜபுரம் பகுதியில் அடிப்படை வசதிகளை கூட அதிகாரிகள் செய்வதில்லை: ஊராட்சி சபை கூட்டத்தில் பொதுமக்கள் குற்றச்சாட்டு

தாம்பரம்: தாம்பரம் அடுத்த வரதராஜபுரம் ஊராட்சியில் திமுக சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நேற்று முன்தினம்  மாலை நடைபெற்றது. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செல்வமணி தலைமை வகித்தார். முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன், திமுக வர்த்தகர் அணி செயலர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம், குன்றத்தூர் ஒன்றிய முன்னாள் தலைவர் படப்பை மனோகரன், வரதராஜபுரம் நல மன்றங்களின் கூட்டமைப்பு தலைவர் ராஜசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள், ‘‘வரதராஜபுரம் ஊராட்சியில் கடந்த 2015ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் சேதமடைந்த சாலைகள் இதுவரை சீரமைக்கப்படவில்லை. மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் போதிய அளவில் கட்டப்படாத நிலையில் குடிநீர்வசதி இல்லாமல் தவித்து வருகிறோம்.போதிய தெருவிளக்குகள் இல்லை, பூங்காக்கள், விளையாட்டுத்திடல், சமுதாயநலக்கூடம், உடற்பயிற்சிக் கூடம், நூலகம் ஆகியவை அமைப்பதற்குத் தேவையான பொது இடங்கள் இருந்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மழைநீர் வடிகால் கால்வாய்கள் இல்லாமல் ஆங்காங்கே சாக்கடை தேங்கி சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்படுகிறது. அடிப்படை வசதிகளை கூட அதிகாரிகள் செய்வதில்லை.

அடையாறு ஆற்றில் திறந்துவிடப்படும் கழிவுநீரால் வரதராஜபுரத்தில் நிலத்தடிநீர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.அரசு பள்ளி, ஆரம்ப சுகாதார நிலைய வசதி இல்லை. நியாயவிலைக் கடைகள் போதிய அளவில் திறக்கப்படாத நிலையில் பொதுமக்கள் 4 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்லும் அவல நிலை உள்ளது. எனவே, கூடுதல் கடைகள் தேவை. சட்டப்பேரவை, மக்களவை உறுப்பினர்கள் நிதி மூலம் எவ்வித பணியும் மேற்கொள்ளப்படவில்லை.குப்பைகளை அகற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப் படவில்லை,’’ என்றனர். தொடர்ந்து, கோரிக்கை மனுக்களை முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனிடம் வழங்கினர். அவற்றை பெற்றுக் கொண்ட ஜெகத்ரட்சகன் பேசியதாவது: ஊராட்சிகளில் எவ்வித பணியும் மேற்கொள்ளப்படவில்லை. மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ள குறைகளைத் தீர்க்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து வலியுறுத்துவோம், என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: