ஆட்களை வைத்து மாதம்தோறும் பல லட்சம் வசூல் மாமூல் தர மறுத்தவரின் கை விரல்கள் உடைப்பு

*  போக்குவரத்து போலீசார் அடாவடி

* ஆட்டோ டிரைவர்கள் சரமாரி புகார்

தாம்பரம்: தாம்பரம் பகுதியில் போலீசார் ஆட்களை வைத்து மாதம்தோறும் அடாவடியாக மாமூல் வசூப்பதாகவும், தர மறுத்தால் தாக்குதல் மற்றும் பொய் வழக்கு போடுவதாக ஆட்டோ டிரைவர்கள் சரமாரியாக புகார் தெரிவித்துள்ளனர்.  தாம்பரம் பகுதியில் ஏராளமான பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், பேருந்து நிலையம், ரயில்நிலையம், மருத்துவமனைகள் உள்ளிட்ட அமைந்துள்ளன. இதனால் சோழிங்கநல்லூர், மேடவாக்கம், செம்பாக்கம், அகரம் தென், மாடம்பாக்கம், பெருங்களத்தூர், முடிச்சூர், மண்ணிவாக்கம், படப்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தினசரி லட்சக்கணக்கான பொதுமக்கள் தாம்பரம் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் பொதுமக்கள் அரசு பேருந்துகள், நான்கு சக்கர வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் என வந்து செல்வது வழக்கம். இதில் பெரும்பாலானோர் வாடகை கார்கள், ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோக்களில் வந்து செல்கின்றனர்.இவர்களின் வசதிக்காக சோழிங்கநல்லூர் பகுதியில் இருந்து 100க்கும் மேற்பட்ட ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோக்கள், மேடவாக்கம் பகுதியில் இருந்து 150க்கும் மேற்பட்ட ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோக்கள், மாடம்பக்கம் பகுதியில் இருந்து 300க்கும் மேற்பட்ட ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோக்கள், அகரம் தென் பகுதியில் இருந்து 300க்கும் மேற்பட்ட ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோக்கள் என ஒரு நாளைக்கு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோக்கள் கிழக்கு தாம்பரம் வரை இயக்கப்படுகிறது.

இந்த ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோ டிரைவர்களிடம் இருந்து போக்குவரத்து போலீசார் ஆட்களை வைத்து மாமூல் வசூலித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒரு ஆட்டோவிற்கு தினசரி ₹20 வீதம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்களிடம் மாமூல் வசூல் செய்வதாக கூறப்படுகிறது.மாமூல் கொடுக்க மறுத்தால் தகாத வார்த்தைகளால் திட்டுவதுடன், ஆவணங்கள் சரியாக இருந்தாலும் அது சரி இல்லை, இது சரி இல்லை என கூறி, அபராதம் விதிக்கின்றனர். கடந்த வாரம் ராஜ் (50) என்ற ஆட்டோ டிரைவர் பயணிகளை அழைத்து வந்து கிழக்கு தாம்பரம் மெட்ராஸ் கிறிஸ்துவ கல்லூரி நுழைவு வாயிலில் இறக்கிவிட்டு செல்லும்போது அங்கு மாமூல் வசூலில் ஈடுபட்டிருந்த வெங்கட் என்பவர் ராஜிடம் மாமூல் பணம் கேட்டுள்ளார். அவர் தர மறுத்ததால் குடிபோதையில் இருந்த வெங்கட் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி அருகில் இருந்த கட்டையை எடுத்து அடித்துள்ளார். இதில் ராஜின் வலது பக்க கையின் விரல்கள் உடைந்தது. பின்னர் ராஜ் சம்பவம் தொடர்பாக சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.இதுபோல போலீசாரின் அடாவடியான செயல்களுக்கும், பொய் வழக்கிற்கும் பயந்து ஆட்டோ டிரைவர்களும் மாமூல் வசூலிப்பவர்களிடம் பணத்தை கொடுத்து விடுகின்றனர்.

இதுகுறித்து ஆட்டோ டிரைவர்கள் கூறுகையில், ‘‘எங்களில் பலர் கடன் வாங்கி ஆட்டோ வங்கியும், வாடகைக்கும் ஆட்டோ ஓட்டி வருகிறோம். ஒரு நாள் முழுவதும் ஆட்டோ ஓட்டினால் எங்களுக்கு பெட்ரோல் செலவு, ஆட்டோவின் வாடகை உள்ளிட்டவை போக கையில் ஒரு நாளைக்கு ₹500 நிற்கும். அதனை வைத்து எங்கள் குடும்பத்தை நடத்தி வருகிறோம். இந்நிலையில், ஆட்களை வைத்துக்கொண்டு போக்குவரத்து போலீசார் ஒரு ஆட்டோவிற்கு ₹20 என தினமும் வசூல் செய்து வருகின்றனர். இதற்கென்று சில ஆட்டோ டிரைவர்களை கையில் போட்டுக்கொண்டு இந்த வசூல் வேட்டையில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு ஆட்டோவிற்கு ₹20 வீதம் அனைத்து ஆட்டோக்களிடமும் பணம் வசூலித்து மாதத்திற்கு பல லட்சம் ரூபாய் மாமூலாக வசூலிக்கின்றனர். இதில் வசூலிக்கும் நபருக்கு கமிஷன் கொடுப்பதால் அந்த நபர்கள் ஆட்டோ டிரைவர்களை மிரட்டியும், தாக்கியும் மாமூல் பணத்தை வசூல் செய்கின்றனர். எனவே இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்,’’ என கோரிக்கை விடுத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: