இந்தி நிகழ்ச்சிகளை தவிர்த்து மதுரை மத்திய சிறை டிவியில் தமிழ் சேனல்களை ஒளிபரப்ப வழக்கு - ஏடிஜிபி பரிசீலிக்க உத்தரவு

மதுரை: மதுரை மத்திய சிறையிலுள்ள டிவியில் இந்தி நிகழ்ச்சிகள் தவிர்த்து தமிழ் சேனல்களை ஒளிபரப்புவது குறித்து, ஏடிஜிபி பரிசீலிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் ரவி (எ) ரவிச்சந்திரன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் ெசய்த மனு: முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு மதுரை மத்திய சிறையில் தண்டனை கைதியாக உள்ளேன். மத்திய சிறையில் விசாரணை மற்றும் தண்டனை கைதிகளாக 1,400 பேர் உள்ளனர். சிறைவாசிகள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிப்பதை தவிர்க்கும் வகையில் சிறையிலுள்ள டிவியில் தினசரி 2 மணி நேரம் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும்.

மதுரை மத்திய சிறையில் பழமையான ஆன்டனா முறை மூலம் டிவி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது. இதில் தற்போது வரை இந்தி நிகழ்ச்சிகள் மட்டுமே ஒளிபரப்பாகிறது. சிறையில் உள்ள பெரும்பாலானோருக்கு இந்தி தெரியாது. இதனால் தங்களின் மன அழுத்தத்தை போக்க முடியாத நிலை உள்ளது. மாநில மொழியான தமிழில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்ப வேண்டியது அவசியம். சிறைவாசிகளின் நலன் கருதி இந்தி நிகழ்ச்சிகள் ஒளிபரப்புவதை நிறுத்தவும், தமிழ் டிவி சேனல்களின் செய்தி, கல்வி, விளையாட்டு மற்றும் வரலாற்று நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர், மனுதாரரின் கோரிக்கை குறித்து சிறைத்துறை ஏடிஜிபி பிப். 28க்குள் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க உத்தரவிட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: