ஊத்தங்கரையில் 5 நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த பிரமாண்ட பெருமாள் சிலை மீண்டும் புறப்பட்டது

ஊத்தங்கரை: ஊத்தங்கரை பாம்பாறு தரைப்பாலத்தை கடக்க முடியாமல், 5 நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த பிரமாண்ட பெருமாள் சிலை ஏற்றப்பட்ட லாரி, 5 ராட்சத இயந்திரம் மூலம் இழுக்கப்பட்டு நேற்று காலை கிருஷ்ணகிரி புறப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கொரக்கோட்டையில், ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 300 டன் எடையுள்ள பிரமாண்ட பெருமாள் சிலை, பெங்களூரு ஈஜிபுரா எனுமிடத்தில் பீடத்துடன் இணைத்து 108 அடி உயரத்தில் நிறுவப்பட உள்ளது. இதற்காக 64 அடி உயரம், 24 அடி அகலம் கொண்ட பெருமாள் சிலை ஏற்றப்பட்ட ராட்சத டிரெய்லர் லாரி கடந்த மாதம் 7ம் தேதி புறப்பட்டது. வந்தவாசி, திருவண்ணாமலை சாலையில் பல்வேறு தடைகளை தாண்டி கடந்த 16ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டைக்கு சிலை வந்தடைந்தது. அங்கிருந்து, மறுநாள் 17ம் தேதி காலை ஊத்தங்கரை புறப்பட்டது. வழியில் பாம்பாறு தரைப்பாலத்தில் பெருமாள் சிலையை கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. லாரியின் டயர்கள் புதைந்து விடுமோ என்ற அச்சத்தில் அங்கேயே நிறுத்தி வைத்திருந்தனர். தொடர்ந்து 5 நாட்களாக நிறுத்தப்பட்டிருந்ததால் அப்பகுதி சுற்றுலாத்தலம் போல் மாறியது. மேல்மருவத்தூர், திருவண்ணாமலை செல்லும் பக்தர்கள் பெருமாளை வழிபட்டு  சென்றனர்.

இந்நிலையில், சென்னையில் இருந்து லாரியுடன் சேர்த்து சிலையை இழுப்பதற்கான ராட்சத இயந்திரம் வரவழைக்கப்பட்டது. நேற்று காலை 11 மணியளவில் 5 ராட்சத இயந்திர வாகனம் மூலம் மெதுவாக இழுக்கப்பட்டு பாம்பாறு தரைப்பாலத்தை பெருமாள் சிலை கடந்து சென்றது. இதை ஏராளமான மக்கள் கூடி நின்று பார்த்தனர். பாம்பாறில் இருந்து ஊத்தங்கரை, திப்பம்பட்டி வழியாக நாளை காலை கிருஷ்ணகிரியை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: