நாகர்கோவிலில் 2வது கட்டமாக பிரபல மால் உள்பட 3 கட்டிடங்களுக்கு சீல்

நாகர்கோவில்: நாகர்கோவிலில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி விதிமீறல் கட்டிடங்களை  சீல் வைக்கும் நடவடிக்கை 2வது கட்டமாக இன்று மேற்கொள்ளப்பட உள்ளது.  நாகர்கோவிலில் தினசரி சராசரியாக 500 வாகனங்கள்  இறக்குமதி ஆகின்றன. இதுதவிர சுற்றுலா மற்றும் வெளியூர் வாகனங்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஆனால் அதற்கேற்ப சாலை வசதிகள் இல்லை. மேலும் பெரும் வணிக நிறுவனங்களும் கார்  பார்க்கிங் வசதி அமைக்காமல் உள்ளதால், அங்கு வருவோரின் வாகனங்கள் சாலையில் நிறுத்தப்பட்டு கடும் போக்குவரத்து நெருக்கடியை ஏற்படுத்தி வருகின்றன. கோட்டாறில் பகலிலும் லாரிகளை நிறுத்தி சரக்குகளை ஏற்றி,  இறக்கி வருவதால் மிகவும் போக்குவரத்து ெநரிசல் ஏற்பட்டு வருகிறது.

கடந்த 2013ம் ஆண்டு நாகராஜன்  கலெக்டராக இருந்தபோது, நாகர்கோவிலில் விதிமீறல் கட்டிடங்கள் மீது  நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.  அனுமதிக்கு மாறாக  கட்டிடங்கள்  கட்டியவர்கள், நகராட்சி மற்றும் உள்ளூர்  திட்ட குழும அனுமதியின்றி அடுக்கு  மாடிகள் கட்டியவர்கள் என பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதன்படி வணிக  நிறுவனங்கள், உணவு விடுதிகள், ரத்த வங்கி உள்பட 58 நிறுவனங்கள் சீல்  வைக்கப்பட்டன. இந்த நிறுவனங்கள்  உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் 2016ல் வழங்கிய தீர்ப்பில் அதிகாரிகள்  சீல் வைத்தது சரியே என கூறியிருந்தது. மேல்முறையீடு செய்யவும் அனுமதி  அளித்திருந்தது. அதன்படி சில   நிறுவனங்கள்   மேல்முறையீடு  செய்தன. இறுதி தீர்ப்பு வரும்வரை  கட்டிடத்தை அப்படியே பராமரிக்க அனுமதி  கேட்டனர். இதை நீதிமன்றம் அனுமதித்தது.

இதற்கிடையே இரு  நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீட்டில், கடந்த 10ம் தேதி உயர்நீதிமன்ற  பெஞ்ச், உடனடியாக இந்த நிறுவனங்களை சீல் வைத்து 21ம் தேதிக்குள் அறிக்கை  தாக்கல் செய்ய  உத்தரவிட்டது. இதன்படி  நேற்று நீதிமன்ற சாலை மற்றும் கே.பி  சாலையில் உள்ள பிரபல ரத்த வங்கி கட்டிடத்தை உள்ளூர் திட்ட குழுமம் மற்றும்  நகராட்சி நகரமைப்பு அதிகாரிகள் சீல் வைத்தனர். இதுதவிர, நகராட்சி  அனுமதியின்றி கலெக்டர்  அலுவலகம் எதிரே கட்டப்பட்ட ஹோட்டல் மற்றும்  வெட்டூர்ணிமடத்தில் ஆசிர்வாத நகர் செல்லும் திட்ட சாலையை ஆக்ரமித்து  கட்டப்பட்ட கட்டிடத்திற்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர். தற்போது 2வது கட்டமாக கலெக்டர்  அலுவலகம் பகுதியில் உள்ள டீக்கடை, வணிக வளாகம் மற்றும் 6 ஆயிரம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ள பங்களா ஆகியவை இன்று சீல் வைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தயக்கம் காட்டும் உள்ளூர் திட்ட குழும அதிகாரிகள்: விதிமீறல் கட்டிடங்கள் கட்டும்போதே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஏன் தடுக்கவில்லை என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இதுபற்றி உள்ளூர் திட்ட  குழும அதிகாரிகள் பதில் தராத நிலையில், நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, நாங்கள் கட்டிடங்கள் கட்டும்போதே பலமுறை எச்சரிக்கை செய்தோம். ஆனால், சிலர் இதனை ஒரு பொருட்டாக கருதவில்லை. சீல் வைப்பது  போன்ற  நடவடிக்கை மேற்கொள்ள உள்ளூர் திட்ட குழுமத்திற்கே அதிகாரம் உள்ளது என்றனர். தற்போதும் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யாத கட்டிடங்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ள நகராட்சி வலியுறுத்தியும்,  உள்ளூர் திட்ட குழும அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. நீதிமன்றம் உத்தரவிட்டதால் மட்டுமே தற்போது நடவடிக்கை மேற்கொள்வதாக கூறப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: