மின் மீட்டர் பொருத்திய தகராறு இரும்பு ராடால் அடித்து சித்தப்பா கொலை அண்ணன் மகன் கைது

ஆவடி: மின் மீட்டர் பொருத்தியதில் ஏற்பட்ட தகராறில் சித்தப்பாவை இரும்பு ராடால் அடித்து கொலை செய்த அண்ணன் மகனை போலீசார் கைது செய்தனர். ஆவடி நந்தவன மேட்டூர், கலைஞர் 1வது தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (44). ஆவடி ரயில்வே ஸ்டேஷன் சாலையில் உள்ள ஸ்டாண்டில் ஆட்டோ டிரைவராக இருந்தார். இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. ஆறுமுகத்தின் அண்ணன் தேவேந்திரன் மகன் தேவராஜ் (25), கட்டிட தொழிலாளி. இவரது பெற்றோர்கள் இறந்து விட்டனர்.

ஆறுமுகம், தனது மனைவியுடனும், தேவராஜ் தனியாகவும் பக்கத்து பக்கத்து வீட்டில் வசித்து வந்தனர்.  இவர்களது இரு வீட்டிற்கும் பொதுவான இடத்தில் சுவர் எழுப்பி மின் மீட்டர் பொருத்தப்பட்டு இருந்தது. மேலும், ஆறுமுகம் தனக்கும், தேவராஜுக்கும் சேர்த்து மின் கட்டணம் செலுத்தி வந்துள்ளார். இதற்கிடையில், மின் மீட்டரின் சுவர் சேதமடைந்துள்ளது. இதையடுத்து, கடந்த வாரம் மின் மீட்டரை கழற்றி தனது வீட்டுக்குள் உள்ள சுவற்றில் ஆறுமுகம் பொருத்தி உள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை தேவராஜ் குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர், அவர் மின் மீட்டரை உங்கள் வீட்டில் ஏன் பொருத்தி உள்ளீர்கள் என கேட்டு ஆறுமுகத்திடம் தகராறு செய்துள்ளார். இந்த தகராறில் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த தேவராஜ், அருகில் கிடந்த இரும்பு ராடை எடுத்து ஆறுமுகத்தை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் வந்து இருவரையும் சமாதானம் செய்து அனுப்பியுள்ளனர். அதன் பிறகு, இரவு 7மணி அளவில் ஆறுமுகத்திற்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனே அவரை, மனைவி ஜெயலட்சுமி ஆவடியில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.  அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ஆறுமுகம் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து, ஜெயலட்சுமி அவரது சடலத்தை  வீட்டுக்கு கொண்டு வந்தார். போலீசுக்கு தகவல் கொடுக்காமல் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடு செய்துள்ளார். மேலும், உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில், நள்ளிரவு சுமார் 12 மணியளவில் ஆறுமுகத்தின் சடலத்தில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது. இதனை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து ஜெயலட்சுமி ஆவடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதில் அவர் கூறியிருப்பதாவது, எனது கணவர் ஆறுமுகத்திற்கும்,  அவரது அண்ணன் மகன் தேவராஜுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில்,  அவர் ஆறுமுகத்தை சரமாரியாக தாக்கியதன் காரணமாக இறந்திருக்கலாம். எனவே, அவரது சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி நடவடிக்கை  எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.  

இதனையடுத்து போலீசார், ஆறுமுகத்தின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், பிரேத பரிசோதனையில்,  இரும்பு கம்பியால் தாக்கியதில்  ஆறுமுகத்தின் நெஞ்சின் உட்பகுதியில் பலத்தகாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகத்தான் அவர் இறந்துள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து, ஆவடி  இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து தேவராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின் மீட்டர் பொருத்துவதில் ஏற்பட்ட தகராறில் சித்தப்பாவை அண்ணன் மகன் அடித்துக்கொன்ற சம்பவம் ஆவடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: