நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்துக்காக பிப்ரவரியில் ராகுல் தமிழகம் வருகை : திருநாவுக்கரசர் தகவல்

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்துக்காக ராகுல் காந்தி பிப்ரவரி முதல் வாரத்தில் தமிழகம் வருகிறார் என்று திருநாவுக்கரசர் கூறினார்.காங்கிரஸ் கட்சியின் அடித்தளத்தை பலப்படுத்தி, மாவட்டம், வட்டார, கிராம மற்றும் வாக்குச்சாவடி அளவில் செயல்படும் கோடிக்கணக்கான கட்சி தொண்டர்களை இணைக்கும் முயற்சியை ராகுல் காந்தி தொடங்கியுள்ளார். இதற்காக சக்தி என்னும் சிறப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்ட தொடக்க விழா சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நேற்று நடந்தது.

விழாவுக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமை தாங்கினார். தகவல் ஆய்வுத்துறை மாநில ஒருங்கிணைப்பாளர் வக்கீல் டி.செல்வம் வரவேற்றார். காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான முகுல் வாஸ்னிக், காங்கிரஸ் தகவல் ஆய்வுத் துறை தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி, அகில இந்திய செயலாளர்கள் சஞ்சய் தத், சிரிவெல்ல பிரசாத், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் சக்தி திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

இந்த சக்தி திட்டத்தில் இணைய வாக்காளர் அடையாள அட்டை எண்ணை, 8828843022  என்ற மொபைல் எண்ணுக்கு அனுப்ப வேண்டும். அனுப்பினால் கட்சியில்  இணைவார்கள்.இந்த விழாவில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், குமரி அனந்தன், தங்கபாலு, சுதர்சன நாச்சியப்பன், பொருளாளர் நாசே ராமச்சந்திரன், செய்தி தொடர்பாளர் குஷ்பு, முன்னாள் எம்பிக்கள் விஸ்வநாதன், ஜெ.எம்.ஆரூண்,ஆய்வுத்துறை தேசிய துணை ஒருங்கிணைப்பாளர் ஜான் அசோக் வரதராஜன், தமிழக ஒருங்கிணைப்பாளர் வக்கீல் டி.செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் லட்சுமி ராமச்சந்திரன், முன்னாள் எம்எல்ஏ கோபிநாத், டாக்டர் செல்லக்குமார், ஜெயக்குமார், எம்எல்ஏக்கள் வசந்தகுமார், விஜயதரணி, பிரின்ஸ், ராஜேஷ் குமார், கணேஷ், ஆராய்ச்சி பிரிவு தலைவர் நாசே ஆர்.ராஜேஷ், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவ ராஜசேகரன், அரும்பாக்கம் வீரபாண்டியன், ரூபி மனோகரன் மற்றும் பி.வி.தமிழ்செல்வன், எம்.பி.ரஞ்சன் குமார், வடசென்னை ரஞ்சித் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பிறகு திருநாவுக்கரசர் அளித்த பேட்டி: நாடாளுமன்ற தேர்தல் தேதி பிப்ரவரி இறுதியிலோ அல்லது மார்ச் முதல் வாரத்திலோ அறிவிக்கப்படலாம். தேர்தலையொட்டி ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரசாரத்தை தொடங்கி வைக்க உள்ளார். தமிழகத்திலும் பிப்ரவரி 2வது வாரத்தில், அதாவது பிப்ரவரி 15 முதல் 20ம் தேதிக்குள் அவர் பிரசாரத்தை தொடங்க உள்ளார். இந்த பிரமாண்ட பிரசாரத்தில் லட்சக்கணக்கானோரை திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது. இந்த கூட்டணி 39 தொகுதியிலும் வெற்றி பெறும். கூட்டணியில் இன்னும் யார் வேட்பாளர் என்பது மட்டும்தான் முடிவு செய்ய வேண்டியுள்ளது. ராகுல் காந்தி பிரதமராவார். தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்று முதல்வர் ஆவார். நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற கட்சியினர் பாடுபட வேண்டும். கோஷ்டி பூசல் இல்லாமல் செயல்பட வேண்டும். வதந்தி இல்லாமல் செயல்பட வேண்டும்.  கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் அல்லது பணியில் உள்ள நீதிபதிதலைமையில் விசாரணை குழு அமைக்க வேண்டும். இந்த விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி உடனடியாக பதவி விலக வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: