கொடநாடு விவகாரத்தில் முதல்வர் ஏன் பயப்பட வேண்டும்? : மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி

சென்னை: கொடநாடு விவகாரத்தில் சுற்றி வளைத்து ஏதேதோ பேசும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, யோக்கியர் என்றால் ஏன் பயப்பட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

கொடநாடு விவகாரத்தில் வசமாக மாட்டிக் கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி விழிபிதுங்கி மனம் வெதும்பிக்கொண்டு இருக்கிறார். நியாயமாக பதவி விலகி விசாரணையை எதிர்கொள்ள வேண்டும். அவரிடம் எல்லாம் நியாய, தர்மங்களை எதிர்பார்க்க முடியாது. ஆனால், உரிய பதிலைச் சொல்லாமல், திசைதிருப்பும் தந்திரத்தைச் செய்து நழுவிக்கொண்டு நாட்களைக் கடத்தி வருகிறார் முதல்வர். எடப்பாடி பழனிசாமிக்காக தான் இதனை செய்கிறேன் என்று கனகராஜ் தன்னிடம் சொன்னதாக சயன், மனோஜ் ஆகிய இருவரும் சொல்கிறார்கள். 2 ஆயிரம் கோடி ரூபாய் பணம் இருந்ததாகவும் சில ஆவணங்களை எடுக்க வேண்டும் என்றும், அதற்காக 5 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டது என்றும் சயன் சொல்லி இருக்கிறார்.

இந்த விவகாரம் முடிந்த பிறகு கனகராஜ் மர்மமான முறையில் விபத்துக்குள்ளாகிறார். சயன் மீது தாக்குதல் நடத்தப்பட்டு அவரது மனைவியும், மகளும் இறக்கிறார்கள். சயன் உயிர் தப்புகிறார். கொடநாடு பங்களாவின் சிசிடிவி ஆபரேட்டர் தினேஷ்குமார் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொள்கிறார். இவை அனைத்துமே முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டாக வைக்கப்படுகிறது. இதற்கு பதில் சொல்வதில் என்ன தயக்கம் அவருக்கு இருக்கிறது? ஏன் இப்படி பயப்படுகிறார், பம்முகிறார் முதல்வர்?

 கனகராஜின் அண்ணன் தனபால் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் பல்வேறு சந்தேகங்களைக் கிளப்புகிறார். ‘‘என் தம்பி மரணத்தில் விடை தெரியாத மர்மங்கள் உள்ளன .சிபிஐ விசாரித்தால் முதல்வர் எடப்பாடி நிச்சயம் சிக்குவார்” என்று கூறியிருக்கிறார்.  ‘‘ஆவணங்கள் எடப்பாடி பழனிசாமியின் கைக்கு வந்ததும் தொடர்புடையவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்” என்று சொல்லி இருக்கிறார் பத்திரிகையாளர் மேத்யூ. இதற்கெல்லாம் முதல்வர் பதில் சொல்லாமல் கழுவிய மீன்களில் நழுவிய மீனாக இருக்கிறார். “கொடநாடு எஸ்டேட்டில் கொலை நடந்ததில் இருந்தே யாரிடமும் தினேஷ் சரியாகப் பேசவில்லை. தற்கொலை செய்துகொண்ட நாளில் யாரிடமோ தினேஷ் அதிக நேரம் பேசினார்” என்று தினேஷ் உறவினர்கள் சொல்கிறார்கள். இதற்கு முதல்வர் என்ன பதில் சொல்லப்போகிறார்?

குற்றச்சாட்டுகளுக்கு நேரடியாக பதில் சொல்லாத முதல்வர், சயான், மனோஜுக்கு ஜாமீன் வாங்கிக் கொடுத்த வழக்கறிஞர்கள் குறித்து அவதூறு கிளப்புகிறார். அந்த வழக்கறிஞர்கள் திமுகவைச் சேர்ந்தவர்கள் என்று ஏதோ பெரிய கண்டுபிடிப்பைச் செய்தவர் போலக் காட்டி வருகிறார். குற்றம் சாட்டப்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு வாதாடுவது வழக்கறிஞர்களின் தொழில். அதற்காக அந்தக் குற்றவாளிக்கும் வழக்கறிஞருக்கும் தொடர்பு என்று சொல்ல முடியுமா? அதுவும் இந்த நாட்டின் முதல்வர் சம்பந்தப்பட்ட ஒரு கிரிமினல் வழக்கு அது.

சயனுக்கோ மனோஜ் என்பவருக்கோ கனகராஜ்க்கு ஏற்பட்ட நிலைமை ஏற்பட்டு விடக்கூடாது அல்லவா? அவர்களைப் பாதுகாப்பது சட்டப்படியான நடவடிக்கைதான். அதனை எந்த வழக்கறிஞரோ, ஏன் திமுக வழக்கறிஞரே செய்திருந்தாலும் தவறு அல்ல. அவர்கள் நீதிமன்றத்தில்தான் உதவி செய்கிறார்களே தவிர, வேறு உதவிகள் செய்யவில்லை என்பதை முதல்வர் உணர வேண்டும். தனது கடந்த காலத்தையும் கொஞ்சம் எண்ணிப்பார்க்க வேண்டும். இதுபோன்ற சிறுபிள்ளைத்தனமான கண்டுபிடிப்புகளைச் செய்து, நாட்டு மக்களின் நகைப்புக்கு ஆளாவதை விட்டுவிட்டு விசாரணையை அவர் எதிர்கொள்ளத் துணிய வேண்டும்.

எனக்கு எந்த பயமும் இல்லை என்று வாயால் சொல்லிக் கொண்டே, இது தொடர்பான செய்திகளை வெளியிடும் மீடியாக்களை கடைந்தெடுத்த கோழைத்தனத்தோடு ஒரு முதல்வர் மிரட்டுகிறார். தொலைக்காட்சி சேனல்களின் கேபிள் வயர்களை துண்டிப்பதாக வேறு தகவல்கள் வருகிறது. இதைவிடக் கீழ்த்தரமான செயல் வேறு உண்டா? யோக்கியர் என்றால் எதற்காக பயப்பட வேண்டும்?

முதல்வர் மீதான குற்றச்சாட்டுகளையெல்லாம் வரிசைப்படுத்தித் தொகுத்து ஆளுநரிடம் மனுவாகக் கொடுத்துள்ளோம். குடியரசுத் தலைவருக்கோ, மத்திய அரசுக்கோ அவர் அனுப்பினாரா, விசாரித்தாரா என்று தெரியவில்லை. இதுவரை அனுப்பாவிட்டால் இனியாவது அவர் அனுப்ப வேண்டும் என்று சட்டம் அறிந்தவர்கள் எதிர்பார்க்கிறார்கள், நாங்களும் எதிர்பார்க்கிறோம். எடப்பாடி பழனிசாமியின் இரண்டு நாள் பேச்சுகள் குற்றம் நடந்திருப்பதையும் அவர் நேரடியாகவே இதில் சம்பந்தப்பட்டு இருப்பதையுமே நிரூபிக்கின்றன.

இன்னமும் ஒரு மணிநேரம் கூட முதல்வர் பதவியில் நீடிக்க அருகதையற்றவராக அவர் ஆகிவிட்டார். இப்படிப்பட்ட ஒருவருக்கு முதல்வர் பதவி ஒரு கேடா என்று தமிழக மக்கள் கேட்பது, அவர் செவிகளைத் செந்தேளாகக் கொட்ட வில்லையா?.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: