நேரடியாகவோ, மறைமுகமாகவோ அரசியல் ஈடுபாட்டில் எந்த ஆர்வமூம் இல்லை: நடிகர் அஜித்குமார் அறிக்கை

சென்னை: நேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை என நடிகர் அஜித் குமார் அறிக்கையில் தெரிவித்துள்ளார். திருப்பூரில் பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகளில் இருந்தவர்கள் தங்களை பாஜகவில் இணைத்துக்கொள்ளும் விழா நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் அஜித் ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் பாஜக கட்சியில் இணைந்தனர். இதனையடுத்து தமிழிசை சவுந்தரராஜன் திரைப்பட கலைஞர்களிடையே நேர்மையானவர் அஜித் என்றும், தான் சம்பாதித்த பணத்தை மக்களுக்காக செலவு செய்ய நினைப்பவர் என்றும், அவரைப்போலவே அஜித்தின் ரசிகர்களும் நல்லவர்கள் இனி மோடியின் திட்டங்களை மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும் என அவரைப்பெருமையாக பேசினார்.

இந்நிலையில் நடிகர் அஜித் குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நான் தனிப்பட்ட முறையிலோ அல்லது நான் சாந்த் திரைப்படங்களில் கூட அரசியல் சாயம் வரக்கூடாது என்பதில் மிகவும் தீர்மானமாக உள்ளேன்; கடமையைச் செவ்வனே செய்வதையே ரசிகர்களிடம் எதிர்பார்க்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். சராசரி பொதுஜனமாக வரிசையில் நின்று வாக்களிப்பதே அதிகபட்ச அரசியல் தொடர்பு என்றும் நடிகர் அஜீத்குமார் தெரிவித்துள்ளார். என்னுடைய தொழில் சினிமாவில் நடிப்பது மட்டுமே என்பதை தெளிவாக புரிந்து வைத்துள்ளேன் என்றார்.  அரசியலில் எனக்கும் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு உண்டு. அதை நான் யார் மீதும் திணப்பது இல்லை, மற்றவர்கள் கருத்தை என் மேல் திணிக்க விட்டதும் இல்லை, என் ரசிகர்களிடம் இதையேதான் நான் எதிர்ப்பார்க்கிறேன்,

உங்கள் அரசியல் கருத்து உங்களுடையதாகவே இருக்கட்டும், என் பெயரோ, என் புகைப்படமோ எந்த அரசியல் நிகழ்விலும் இடம் பெறுவதை நான் சற்றும் விரும்புவதில்லை, எனது ரசிகர்களிடம் எனது வேண்டுகோள் என்னவென்றால் நான் உங்களிடம் எதிர்பார்ப்பது எல்லாம் மாணவர்கள் தங்களது கல்வியில் கவனம் செலுத்துவதும், தொழில் மற்றும் பணியில் உள்ளோர் தங்களது கடமையை செவ்வனே செய்வதும், சட்டம் ஒழுங்கை மதித்து நடந்துக் கொள்வதும், ஆரோக்கியத்தின் மீது கவனம் வைப்பதும், வேற்றுமை கலைந்து ஒற்றுமையுடன் இருப்பது. மற்றவர்களுக்கு பரஸ்பர மரியாதை செலுத்துவதும், ஆகியவை தான்.அதுவே நீங்கள் எனக்கு செய்யும் அன்பு. வாழு வாழ விடு என தனது அறிக்கையில் அஜித்குமார் குறிப்பிட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: