அமெரிக்க அரசு நிர்வாக முடக்கத்துக்கு தீர்வு டிரம்பின் புதிய சமரச முயற்சியும் தோல்வி: ஜனநாயக கட்சி பிடிவாதம்

வாஷிங்டன்: கடந்த ஒருமாதமாக அரசு நிர்வாகம் முடங்கி இருப்பதற்கு தீர்வு காண, அமெரிக்க அதிபர் டிரம்ப் எடுத்த புதிய முயற்சியும் தோல்வி அடைந்துள்ளது.அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் சட்ட விரோத ஊடுருவலை  தடுக்க, தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என்பதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பிடிவாதமாக உள்ளார். இதற்காக சுமார் ₹40,000 கோடி நிதியை ஒதுக்கீடு செய்யும் தீர்மானம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது.  இதற்கு எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், கடந்த 29 நாளாக அரசு நிர்வாகம் முடங்கியிருக்கிறது. சுமார் 8 லட்சம் அரசு ஊழியர்கள் சம்பளம் பெறாமல் வேலை செய்து வருகிறார்கள்.அமெரிக்க வரலாற்றில், ஒருமாதம் வரை அரசு நிர்வாகம் முடங்கியிருப்பது இதுவே முதல் முறை. இப்பிரச்னைக்கு தீர்வு காண, அதிபர் டிரம்ப் ஜனநாயக கட்சி எம்பி.க்்களுடன் கடந்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தி தோல்வியை  கண்டார். தற்போது, 2வது முறையாக சமரச முயற்சியை எடுத்துள்ளார். வெள்ளை மாளிகையில் நேற்று முன்தினம் டிரம்ப் ஆற்றிய சிறப்பு உரையில் கூறியதாவது:

மனித கடத்தல், போதை பொருள் கடத்தல் மற்றும் பிற குற்றங்களுக்கு வழிவகுக்கும் வகையில் திறந்தவெளி எல்லையை கோரும், கிளர்ச்சி குரல்கள் ஓங்கி ஒலித்திடாத அளவுக்கு நமது எதிர்காலத்தை காக்க வேண்டிய நேரம்  இது. எல்லை தடுப்பு சுவர் ஒழுக்கக் கேடானது அல்ல. அது பல உயிர்களை காப்பாற்றக்கூடியது. எனவே, இந்த விஷயத்தில் அனைத்து தரப்பும் இணைந்து செயல்பட வேண்டும். தற்போது ஏற்பட்டுள்ள அரசு நிர்வாக முடக்கத்தை  தீர்வு காண சில சலுகைகள் கொண்டு வருகிறேன். சிறு வயதிலேயே தங்கள் பெற்றோர்களுடன் அமெரிக்காவுக்கு சட்ட விரோதமாக குடியேறியுள்ளவர்களை மீண்டும் அவர்களின் தாய் நாடுகளுக்கே திரும்பி அனுப்பும் திட்டத்தை  3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கிறேன். இதன் மூலம், அவர்கள் மேலும் 3 ஆண்டுகளுக்கு அமெரிக்காவிலேயே தங்கி வேலை பார்க்கலாம்.இதேபோன்று, உள்நாட்டு போர் மற்றும் இயற்கை சீற்றங்களால் தங்கள் நாட்டை விட்டு அமெரிக்காவில் அகதிகளாக குடியேறிய சுமார் 3 லட்சம் பேரும் மேலும் மூன்றாண்டுகள் இங்கிருக்க அனுமதி வழங்கப்படும். இவ்வாறு  டிரம்ப் கூறினார். ஆனாலும், இந்த சமரசத்தை ஏற்க ஜனநாயக கட்சி மறுத்துவிட்டது. ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட இந்த சலுகைகள், சிறுவயதிலேயே சட்ட விரோத குடியேறிகளின் பிரச்னைக்கு எந்தவித நிரந்தர தீர்வும் காணாது என ஜனநாயக  கட்சி கூறியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: