ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் நடப்பு சாம்பியன் பெடரர் அதிர்ச்சி தோல்வி: ஷரபோவா, கெர்பரும் வெளியேற்றம்

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில், நடப்பு சாம்பியன் ரோஜர் பெடரர் (சுவிஸ்) அதிர்ச்சி தோல்வியடைந்தார்.ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் தொடரான ஆஸி. ஓபனில், பரபரப்பான கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் நட்சத்திர வீரரான பெடரர் (37 வயது, 3வது ரேங்க்) கிரீஸ் நாட்டின் 20 வயது இளம் வீரர் ஸ்டெபனாஸ் சிட்சிபாஸுடன்  (14வது ரேங்க்) நேற்று மோதினார். முதல் செட்டில் பெடரர் 7-6 (13-11) என்ற கணக்கில் டை பிரேக்கரில் வென்று முன்னிலை பெற்றார்.இரு வீரர்களும் முழு திறமையை வெளிப்படுத்தி கடுமையாகப் போராட, 2வது செட் ஆட்டமும் டை பிரேக்கர் வரை இழுபறியாக நீடித்தது. இதில் சிட்சிபாஸ் 7-6 (7-3) என வென்று 1-1 என சமநிலை ஏற்படுத்தினார். அதே  வேகத்துடன் விளையாடி பெடரரின் சர்வீஸ் ஆட்டத்தை முறியடித்த அவர் 7-5 என 3வது செட்டை கைப்பற்றினார். நான்காவது செட்டில் இருவரும் சளைக்காமல் புள்ளிகளைக் குவித்து முன்னேறியதால் ஆட்டத்தில் அனல் பறந்தது. இந்த செட்டும் டை பிரேக்கருக்கு செல்ல, அதிரடியாக விளையாடிய சிட்சிபாஸ் 6-7 (11-13), 7-6 (7-3), 7-5, 7-6 (75)  என்ற செட் கணக்கில் வென்று முதல் முறையாக கிராண்ட் ஸ்லாம் தொடரின் கால் இறுதிக்கு முன்னேறினார்.

ஆஸி. ஓபனில் 6 முறை சாம்பியனும், 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவருமான பெடரர் 3 மணி, 45 நிமிடம் போராடி தோற்று ஏமாற்றத்துடன் வெளியேறினார்.நடால் அபாரம்: மற்றொரு 4வது சுற்றில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் 6-0, 6-1, 7-6 (7-4) என்ற நேர் செட்களில் செக் குடியரசின் தாமஸ் பெர்டிச்சை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார். நடப்பு தொடரில் அவர் இதுவரை ஒரு  செட்டில் கூட தோற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.குரோஷியாவின் மரின் சிலிச்சுடன் (6வது ரேங்க்) மோதிய ஸ்பெயினின் ராபர்டோ பாடிஸ்டா அகுத் 6-7 (6-8), 6-3, 6-2, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் போராடி வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார். மிகவும் விறுவிறுப்பாக  அமைந்த இப்போட்டி 3 மணி, 58 நிமிடத்துக்கு நீடித்தது.டியாபோ சவால்: பல்கேரியாவின் கிரிகோர் திமித்ரோவுடன் (20வது ரேங்க்) மோதிய அமெரிக்க வீரர் பிரான்சிஸ் டியபோ (21 வயது, 31வது ரேங்க்) 7-5, 7-6 (8-6), 6-7 (1-7), 7-5 என்ற செட் கணக்கில் 3 மணி, 39 நிமிடம் போராடி  வென்றார். கால் இறுதியில் அவர் ரபேல் நடாலை எதிர்கொள்கிறார்.

நடால் இதுவரை ஒரு செட்டில் கூட தோற்காதது குறித்து டியபோவிடம் கேட்டபோது, ‘அவர் அதற்கு தயாராவது நல்லது’ என்று மிகுந்த தன்னம்பிக்கையுடன் பதிலளித்தார்.

இளம் வீரர்கள் சிட்சிபாஸ், டியாபோ, அலெக்சாண்டர் ஸ்வெரவ், டானில் மெட்வதேவ் ஆகியோரின் சிறப்பான ஆட்டம், ஆஸி. ஓபனில் சாம்பியன் பட்டம் வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்பை மேலும் எகிறச் செய்துள்ளது.உள்ளூர் நட்சத்திரம்: மகளிர் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் முன்னாள் நம்பர் 1 வீராங்கனை மரியா ஷரபோவாவுடன், ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்தி மோதினார். முதல் செட்டை 4-6 என இழந்த பார்தி, பின்னர் அதிரடியாக  விளையாடி 6-1, 6-4 என அடுத்த 2 செட்களையும் கைப்பற்றி கால் இறுதிக்கு முன்னேறினார். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வெல்லும் கனவுடன் களமிறங்கிய ஷரபோவா, 4வது சுற்றுடன்  வெளியேறினார்.மற்றொரு 4வது சுற்றில் ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் (2வது ரேங்க்) 0-6, 2-6 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் டேனியல் கோலின்ஸிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார். இப்போட்டி 58 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது. செக் குடியரசின் பெத்ரா குவித்தோவா 6-2, 6-1 என்ற நேர் செட்களில் அமெரிக்க வீராங்கனை அமண்டா அனிசிமோவாவை வீழ்த்தி கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: