ரஞ்சி அரை இறுதிக்கு முன்னேறியது சவுராஷ்டிரா

லக்னோ: உத்தரப் பிரதேச அணியுடனான ரஞ்சி கோப்பை கால் இறுதி ஆட்டத்தில், சவுராஷ்டிரா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்று அரை இறுதிக்கு முன்னேறியது. வாஜ்பாய் ஏகனா ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த உத்தரப் பிரதேசம் முதல் இன்னிங்சில் 385 ரன் குவித்தது. ரிங்கு சிங் 150 ரன் விளாசினார். சவுராஷ்டிரா முதல் இன்னிங்சில் 208 ரன்னுக்கு சுருண்டது. ஹர்விக் தேசாய் 84, மன்கட் 67 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். 177 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை விளையாடிய உ.பி. அணி 194 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

இதையடுத்து, 372 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய சவுராஷ்டிரா, கடைசி நாளான நேற்று 4 விக்கெட் இழப்புக்கு 372 ரன் எடுத்து வெற்றியை வசப்படுத்தியது (115.1 ஓவர்). ரஞ்சி வரலாற்றில் வெற்றிகரமாக சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக இது அமைந்தது. தொடக்க வீரர்கள் தேசாய் 116, ஸ்னெல் பட்டேல் 72 ரன் விளாசினர். விஷ்வராஜ் ஜடேஜா 35, மக்வானா 7 ரன்னில் பெவிலியன் திரும்பினர். செதேஷ்வர் புஜாரா 67 ரன், ஷெல்டன் ஜாக்சன் 73 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். தேசாய் ஆட்ட நாயகன் விருது பெற்றார். 24ம் தேதி தொடங்கும் அரை இறுதியில் சவுராஷ்டிரா - கர்நாடகா, கேரளா - விதர்பா அணிகள் மோதுகின்றன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: