கூடுதல் ரூபாய் நோட்டு வெளியிடப்படுமா?

கொல்கத்தா: நாட்டின் ஜிடிபி வளர்ச்சிக்கு ஏற்ப கூடுதல் ரூபாய் நோட்டு தேவைப்படும் என ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கருப்பு பணத்தை மீட்கும் நடவடிக்கையாக கடந்த 2016 நவம்பர் 8ம் தேதி பழைய ₹500 மற்றும் ₹1,000 நோட்டுக்களை மதிப்பு நீக்கம் செய்து மத்திய அரசு அறிவித்தது. இதன்பிறகு ₹2,000, ₹500, ₹200 நோட்டு அச்சிட்டு வெளியிடப்பட்டன. ₹1,000 நோட்டு வெளியிடப்படவில்லை. தற்போது உயர் மதிப்பு ரூபாயாக ₹2,000 நோட்டு உள்ளது. ஆனால், ₹2,000 நோட்டு அச்சிடும் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டது. புழக்கத்திலும் குறைந்தது. இது மக்களிடையே அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் வெளியிட்ட விளக்கத்தில், போதுமான ரூபாய் நோட்டு புழக்கத்தில் இருப்பதால் புதிதாக அச்சடிக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், கொல்கத்தாவில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற ரிசர்வ் வங்கி அதிகாரிகள், நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர். அப்போது ஒரு அதிகாரி கூறுகையில், பணமதிப்பு நீக்கத்துக்கு பிறகு புதிதாக ₹2,000 நோட்டை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. பணமதிப்பு நடவடிக்கைக்கு பிறகு கள்ள நோட்டு எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. தற்போது கள்ள நோட்டு மிக சொற்ப எண்ணிக்கையில்தான் புழக்கத்தில் உள்ளது. எனினும், ரிசர்வ் வங்கி மேலும் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் ரூபாய் நோட்டுக்களை வெளியிடும்.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு (ஜிடிபி) ஏற்ப, நாட்டின் பொருளாதாரத்தில் கூடுதல் பணம் புழக்கத்துக்கு தேவைப்படலாம். அப்போது இதுபற்றி முடிவு செய்யப்படும் என்றார். இதுபோல், டெபாசிட்களை பெறும் வங்கி சாரா நிதி நிறுவனங்களை கண்காணிக்க ஓம்பட்ஸ்மேன் (தீர்ப்பாய அதிகாரி) நியமிக்கப்படுவார். டிஜிட்டல் தீர்வுகளுக்கும் தனியாக ஓம்பட்ஸ்மேன் நியமனம் செய்யப்படுவார். நிதிச்சேவைகளில் தேசிய அளவிலான உத்தியை ரிசர்வ் வங்கி பின்பற்றி வருகிறது. குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு என நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. எந்த இடையூறுகளும் இல்லாமல் கடனுதவி பெற இந்த குழு உதவியாக இருக்கும் என மற்றொரு ரிசர்வ் வங்கி அதிகாரி தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: