பொங்கல் கொண்டாட சென்ற 10 லட்சம் பேர் நாளை சென்னை திரும்புகின்றனர் : புறநகரில் வாகன நெரிசல் ஏற்பட வாய்ப்பு

சென்னை : தமிழகத்தில் நேற்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி கடந்த சனிக்கிழமை முதல் வருகிற வியாழக்கிழமை வரை, 6 நாட்கள் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், பொங்கல் பண்டிகையை தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாட சென்னை உள்ளிட்ட நகர் பகுதியில் இருப்பவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை மாலை முதல் ரயில் மற்றும் பஸ், கார்களில் வெளியூர் செல்ல தொடங்கினர். பொங்கல் பண்டிகைக்காக சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல தமிழக அரசு, அதிகளவில் சிறப்பு பஸ்களை அறிவித்தது. அதன்படி பொங்கல் பண்டிகை வரை மொத்தம் 14,263 பேருந்துகள் சென்னையில் இருந்து மட்டும் இயக்கியது. மற்ற ஊர்களில் இருந்து, 10,445 சிறப்பு பேருந்து என மொத்தம் 24,708 பேருந்துகள் இயக்கப்பட்டது. இந்த சிறப்பு பஸ்கள் கடந்த 11ம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் இயக்கப்பட்டு வந்தது. பயணிகள் வசதிக்காக 5 இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.  

பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட கடந்த 11ம் தேதி (வெள்ளி) முதலே சென்னையில் இருந்து ரயில் மற்றும் சிறப்பு பஸ்களில் பொதுமக்கள் செல்ல தொடங்கி விட்டனர். குறிப்பாக கன்னியாகுமரி, நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு அதிகளவில் சென்றுள்ளனர். தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் பொதுமக்கள் சொந்த ஊர் செல்வதில் ஆர்வம் காட்டினர்.இந்நிலையில் திருச்சி, சேலம், கோவை, திருவண்ணாமலை, வந்தவாசி, வேலூர், குடியாத்தம், கடலூர், பண்ருட்டி, விழுப்புரம் உள்ளிட்ட வடமாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் கடைசிநாளான நேற்று சொந்த ஊர்களுக்கு செல்ல ஆர்வம் காட்டினர். இதனால் நேற்று அதிகாலை முதலே கோயம்பேடு, தாம்பரம், பூந்தமல்லி, கே.கே.நகர், மாதவரம் பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகளவில் இருந்தது. அதேபோன்று சென்னை எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையங்களில் இருந்து பகல் நேரத்தில் செல்லும் ரயில்களில் செல்ல பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

இதுகுறித்து அரசு போக்குவரத்துக்கழக உயர் அதிகாரி கூறும்போது, “பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்ல சென்னையில் வசிப்பவர்கள் அதிகம் ஆர்வம் காட்டினர். கடந்த 11ம் தேதி முதல் இன்று (14ம் தேதி) வரை சுமார் 14 ஆயிரம் சிறப்பு பஸ்கள் மற்றும் வழக்கமாக இயக்கப்படும் பஸ்கள், ரயில்கள் மற்றும் கார்களில் இதுவரை சுமார் 10 லட்சம் பேர் குடும்பமாகவும் தனியாகவும் சென்னையை விட்டு கிளம்பி உள்ளனர். இதனால் சென்னையில் முக்கியமான சாலைகள் மற்றும் வர்த்தக பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு செல்ல ஒருவருக்கு கூட பஸ் வசதி இல்லை என்று சொல்லும் அளவுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டு, அனைவரும் சொந்த ஊர்களில் பொங்கல் கொண்டாட அழைத்து செல்ல அரசு சிறப்பான ஏற்பாடு செய்துள்ளது என்றார். விடுமுறை முடிந்து அனைவரும் நாளை இரவு முதல் சென்னைக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 11ம் தேதி முதல் சென்னையில் இருந்து கிளம்பிய அவர்கள், நாளை ஒரே நாளில் சென்னைக்கு திரும்ப இருப்பதால், சென்னையின் புறநகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: