விவசாயிகளின் கூட்டியக்கம் சார்பில் 8 மாவட்டங்களில் தொடர் காத்திருப்பு போராட்டம்

சென்னை,: தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுசெயலாளர் பெ.சண்முகம் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் 30 உயர் அழுத்த மின் திட்டங்களுக்கு மத்திய மின்சார வாரியமும், தமிழக அரசும் அனுமதி கொடுத்துள்ளது. மத்திய அரசின் பவர்கிரிட் நிறுவனமும், தமிழக மின்சார வாரியமும் இந்த பணிகளை செய்துவருகிறது. உயர் அழுத்த மின்கோபுரம் விவசாயிகளுக்கு சொந்தமான விளை நிலங்கள் வழியே கொண்டுசெல்லபடுவதால் நிலத்தின் மதிப்பு குறைவது, மரப்பயிர்கள் செய்ய முடியாத நிலை உள்ளிட்ட பல விதமான பாதிப்புகள் விவசாயிகளுக்கு ஏற்படுகிறது.விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் மின்கோபுரம் அமைக்கும் பணிகளை மேற்கொள்வது சட்டவிரோதமாகும். ஏற்கனவே அமைக்கப்பட்ட மின்கோபுரங்களுக்கு செல்போன் டவருக்கு வழங்குவது போல் வாடகை வழங்க வேண்டும். இனிமேல் செயல்படுத்த உள்ள உயர் அழுத்த மின்திட்டங்களை கேபிள் வழியாக நிறைவேற்ற வேண்டுமென்ற இரண்டு கோரிக்கைகளை தமிழக அரசிடம் முன்வைத்தோம். இதுகுறித்து கடந்த 6ம் தேதி மின்துறை அமைச்சர் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் எங்களின் கோரிக்கைகளை ஏற்க அரசு மறுத்துவிட்டது.

எனவே, வேறு வழியில்லாமல் உயர்மின்கோபுர எதிர்ப்பு விவசாயிகளின் கூட்டியக்கம் சார்பில் வரும் 17ம் தேதி முதல் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, வேலூர் ஆகிய எட்டு மாவட்டங்களில் விவசாயிகள் தங்கள் நிலங்களில் அமர்ந்து தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு தனது நிலையை பரிசீலனை செய்து விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்க முன்வர வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: