நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் மாளிகை முதல் பல்கலைக்கழகம் வரை தொடர்பு : கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

சென்னை: நிர்மலாதேவி விவகாரத்தில், ஆளுநர் மாளிகை துவங்கி மதுரை காமராஜ் பல்கலை வரை சம்பந்தம் இருக்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக மனித உரிமைகள் பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டது. இக்குழு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் களஆய்வு நடத்தியது. அதுகுறித்த புத்தகம் வெளியிடப்பட்டது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் கே.பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் நடைபெறும் பல்வேறு மனித உரிமை மீறல்கள் குறித்து உண்மை கண்டறிய களஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. அது தொடர்பாக, ஏற்கனவே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து மனித உரிமை பாதுகாப்புக்குழு விரிவான ஆய்வு நடத்தி, உண்மைகளை உலகுக்கு கொண்டு வந்துள்ளது. தமிழகத்தில் தற்போது நடந்த வெவ்வேறு சம்பவங்கள் தொடர்பாக விரிவான ஆய்வு நடத்தப்பட்டது. அதன்படி செங்கோட்டையில் செப்டம்பர் 13, 14 தேதிகளில் விநாயகர் ஊர்வலத்தை ஒட்டி, மதவெறி கும்பலால் அரங்கேற்றப்பட்ட வன்முறை சம்பவங்கள் தொடர்பாக ஆய்வு நடந்தப்பட்டது. அப்போது மதக்கலவரத்தை தூண்டி விட்டு, அரசியல் ஆதாயம் அடைய முயற்சித்த அதிர்ச்சிகரமான விவரங்கள் தெரியவந்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் விவசாயி முத்துச்சாமி மற்றும் குடும்பத்தினர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல், கந்துவட்டிக்காரர்களிடம் சிக்கி கடனை செலுத்த முடியாமல் தற்கொலை செய்தது தெரிந்தது. இது வெறும் தற்கொலை அல்ல, ஆட்சியாளர்கள் அரங்கேற்றிய படுகொலையாகும். மேலும், முதுகுளத்தூரில் காவல் நிலையத்தில் விசாரணைக்கு சென்று படுகொலையான மாசிலாமணி என்ற இளைஞன் பற்றியும் பல அதிர்ச்சிகரமான உண்மை வெளி வந்துள்ளது. அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியர் நிர்மலாதேவி, மாணவிகளை பாலியல் வற்புறுத்தலுக்கு உள்ளாக்கிய சம்பவம், கல்லூரியில் நடந்தது போன்று தெரியவில்லை. இதில் ஆளுநர் மாளிகை துவங்கி, மதுரை காமராஜர் பல்கலை அலுவலகம் வரை சம்பந்தம் இருப்பது தெரியவருகிறது. நிர்மலாதேவி, கருப்பசாமி, முருகன் ஆகிய மூன்று பேரை பலிகடாவாக்கிவிட்டு, பிரச்னையை மூடி மறைக்கும் முயற்சி நடந்து கொண்டிருப்பது களஆய்வில் தெரியவருகிறது. எனவே இச்சம்பவம் குறித்து நீதிமன்ற மேற்பார்வையில் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும். கவர்னர் அமைத்த சந்தானம் தலைமையிலான விசாரணை குழுவை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.தமிழகத்தில் நடந்த பல்வேறு மனிதஉரிமை மீறல்களுக்கு அவசரமாக சட்டமன்றத்தில் சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். தற்ேபாது நடந்த 5 மாநில தேர்தல்களில் பாஜவுக்கு பின்னடைவுதான். தமிழகத்திலும் இது பிரதிபலிக்கும். தமிழகத்தில் ஏற்கனவே பாஜவுக்கு எதிர்ப்பு அலைதான் இருக்கிறது, தற்போது அது புயலாக மாறும் நிலை ஏற்பட்டிருக்கிறது.இவ்வாறு  அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: