ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பான விசாரணை ஆணையத்துக்கு மேலும் 3 மாதம் காலநீட்டிப்பு

சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பாக விசாரித்து வரும் நீதிபதி ராஜேஷ்வரன் தலைமையிலான ஆணையத்துக்கு மேலும் 3 மாதம் காலநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மெரினா, மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் நடந்த போராட்டத்தின்போது இறுதி நாளில் கலவரம் வெடித்தது.இதுதொடர்பாக விசாரிக்க, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் தலைமையில் கடந்த 2017 ஜனவரியில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் நீதிபதி ராஜேஷ்வரன் விசாரித்து வருகிறார்.

கடந்த நவம்பரில் கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜேஷ்வரன், ‘இந்த விசாரணை 6, 7 மாதங்களில் முடிக்கப்படும். 1,956 சாட்சிகளிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது’ என்று தெரிவித்திருந்தார். விசாரணை ஆணையங்கள் தொடர்பான வழக்கு விசாரணையின்போது, ஜல்லிக்கட்டு தொடர்பான விசாரணை ஆணையத்துக்கு மேலும் 3 மாதங்கள் மட்டுமே நீட்டிப்பு தரவேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.இந்நிலையில், ஜல்லிக்கட்டு ஆணையத்துக்கான காலக்கெடு முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து, மேலும் 3 மாதங்களுக்கு விசாரணை ஆணையத்தின் காலஅவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: