பிளாஸ்டிக் மீதான தடையை எதிர்த்து சென்னையில் 18-ம் தேதி ஆர்ப்பாட்டம்

சென்னை: பிளாஸ்டிக் மீது விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து வரும் 18ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக தமிழ்நாடு- பாண்டி பிளாஸ்டிக் சங்கம் அறிவித்துள்ளது.  இதுகுறித்து சென்னையில் நேற்று சங்கத்தின் தலைவர் சங்கரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பல்லாயிரக்கணக்கான சிறு, குறு தொழில் முனைவோர்கள் மற்றும் பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் ஜனவரி 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, தமிழகத்தில் உள்ள சிறு,குறு பிளாஸ்டிக் தொழில் முனைவோர்கள் தயாரிக்கும், விற்பனை செய்யும் மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் மட்டும் தடை செய்யப்படுகிறது. ஆனால், பன்னாட்டு நிறுவனங்களும், இந்திய பெரு முதலாளிகளும் தயாரிக்கும் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்கள் மீது தடை கிடையாது என்பது இந்த அறிவிப்பின் மூலம் தெளிவாக தெரிகிறது. இது சட்டத்திற்கு புறம்பானது, மாற்றாந்தாய் மனப்பான்மையை காட்டுவதாக கூறி கடுமையாக எதிர்த்தோம். தமிழக அரசின் இந்த அறிவிப்பின் மூலம் தமிழகத்தில் பிளாஸ்டிக் உற்பத்தி தொழிலை ஒட்டிய 20 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள்.

பிளாஸ்டிக் தொழிலை நம்பி பல கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளோம். எங்களுக்கு உரிய கால அவகாசம் கொடுக்காமல் திடீரென தடை செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. நாங்கள் உற்பத்தி செய்யும் பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்யக்கூடியவைகள். இதுகுறித்து, முதல்வருடன் ஆலோசனை நடத்த பலமுறை வாய்ப்பு கேட்டும் ஒருமுறை கூட அழைப்பு விடுக்கப்படவில்லை.

இந்தியாவில் 55 சதவீதத்திற்கும் மேல் பிளாஸ்டிக் உற்பத்தி செய்யப்படும் மாநிலம் குஜராத் தான். ஆனால், பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும் என்று கூறும் பிரதமர் தான் முதல்வராக இருந்த குஜராத்தில் பிளாஸ்டிக்கை ஒழிக்க முன்வரவில்லை. மறுசுழற்சி முறைக்கு ஊக்கம் கொடுக்காமல் தொழிலை முடக்க வேண்டும் என்று அரசு இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. எனவே, எங்கள் தொழில் இந்த தடையால் எவ்வாறு பாதிக்கும் என்பதை தமிழக அரசுக்கு ஜனநாயக முறையில் தெரிவிக்கும் வகையில் வரும் 18ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு வணிகர் சங்க தலைவர் த.வெள்ளையன் கலந்துகொள்கிறார். இவ்வாறு கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: