அம்பை பகுதி பஸ்களில் பரிதாப பயணம்: மாணவர்களின் நலனுக்காக கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

அம்பை: தமிழகத்தை பொறுத்தவரை அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கில் கல்வித்துறை செயல்பட்டு வருகிறது. இதற்காக பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள், லேப்-டாப் போன்ற உபகரணங்கள் வழங்கி வருவதோடு, அவர்களுக்கு இலவச பஸ் பாசும் வழங்கப்பட்டுள்ளது. அரசு பஸ்களில் மட்டும்தான் இந்த சலுகை. ஆனால் இந்த பஸ்பாசால் மாணவர்கள் படும் பாடு சொல்லி மாளாது. பஸ் நிறுத்தங்களில் மாணவ, மாணவிகள் நிற்பதை பார்த்துவிட்டால் டிரைவர்கள் அங்கு வண்டியை நிறுத்தாமல், சற்று தள்ளி நிறுத்துவார்கள். மாணவர்கள் பாட புத்தக மூட்டைகளை தூக்கிக்கொண்டு ஓடிச்சென்று ஏறுவதற்குள் அவர்கள் பஸ்சை கிளப்பி சென்று விடுவார்கள். அடுத்த பஸ் எப்போது வருமோ என்று மாணவர்கள் பஸ் நிலையத்தில் தவம் கிடக்க வேண்டியதுதான். அதற்குள் பள்ளி தொடங்கி விடும். தாமதமாக சென்றால் பள்ளி ஆசிரியர்களின் வசவு ஒருபக்கம். இப்படி மத்தளத்திற்கு இருபக்கமும் அடி என்பதுபோல் மாணவர்களின் இன்றைய நிலை அப்படித்தான் உள்ளது.

இங்கே நீங்கள் பார்ப்பது அம்பை பகுதியில் எடுக்கப்பட்ட படம். உள்ளே இடம் இல்லாமல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் உயிரை கையில் பிடித்து கொண்டு செல்கிறார்கள். சர்க்கசில் சாகசம் செய்வது போன்று புத்தக மூட்டை முதுகுக்கு பின்பக்கம் தொங்கி கொண்டிருக்க அவர்கள் எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்று பயத்துடன் பயணம் செய்கிறார்கள். மாணவர்கள் கஷ்டப்பட்டு பஸ்சில் ஏறினாலும் கூட அவர்கள் நெஞ்சு திக்..திக் என்று அடித்துக்கொண்டிருப்பதை உணர முடியும். தினமும் இப்படித்தான் எங்கள் பயணம். நாங்கள் பள்ளி, கல்லூரி போய்ச் சேருவோமா? என்று எங்களுக்கே தெரியாது என்று மாணவர்களின் புலம்பலையும் கேட்க முடிகிறது. மாணவர்களின் நலன் கருதி காலை, மாலை கூடுதல் பஸ் இயக்கவேண்டும். அம்பை உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் இருக்கவேண்டும். மாணவர்களை ஏற்றிச்செல்ல அவர்கள் உதவவேண்டும். அம்பையை பொறுத்தவரை காலை நேரத்தில் அரசு பஸ்சுடன் கல்லிடைக்குறிச்சியில் இருந்து மினி பஸ்சும் வருகிறது. இதில் நான் பெரியவனா, நீ பெரியவனா என போட்டி போட்டு ஒருவரை ஒருவர் முந்திச்செல்ல முயல்வதால் விபத்து ஆபத்தும் உள்ளதாக மாணவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். மாணவர்கள் நிம்மதியாக பள்ளிக்கு செல்ல கூடுதல் பஸ்கள் இயக்கவேண்டும் என்பதே அவர்களின் தலையாய கோரிக்கை.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: