தரம் உயர்த்தப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும் தகர கொட்டகையில் செயல்படும் மலைப்பகுதி அரசு பள்ளி

ஈரோடு: தரம் உயர்த்தப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும் மலைப்பகுதி அரசு பள்ளியில் கட்டிட வசதி இல்லாததால் தகர கொட்டகையில் பாடம் நடத்தப்பட்டு வரும் அவலநிலை நீடித்து வருகின்றது. ஈரோடு மாவட்டத்தில் மலைப்பகுதிகளில் உள்ள நலத்துறை மற்றும் அரசு பள்ளிகளில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாத நிலை இருந்து வருகின்றது. குறிப்பாக பள்ளிகள் தரம் உயர்த்தப்படாமலும் ஒரு சில பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டாலும் அதற்கு ஏற்ப கட்டிட வசதிகள், ஆசிரியர்கள் நியமனம் உள்ளிட்டவைகள் செய்யப்படுவது கிடையாது. இதனால் மலைவாழ் மாணவர்களின் கல்வி கடுமையாக பாதிக்கப்படுகிறது. குன்றி மலைப்பகுதியில் குஜ்ஜம்பாளையத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியை தரம் உயர்த்த வேண்டும் என்று பெற்றோர்கள் வலியுறுத்தி வந்ததையடுத்து நீண்ட போராட்டத்திற்கு பிறகு கடந்தாண்டு நடுநிலைப்பள்ளியில் இருந்து உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தி அரசு உத்தரவிட்டது. ஆனால் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிக்கு இன்று வரை கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டிக்கொடுக்கப்படாமல் இருந்து வருகின்றது. இப்பள்ளியில் குன்றி, குஜ்ஜம்பாளையம், அனில் நத்தம் உள்ளிட்ட பல்வேறு மலைக்கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் படித்து வருகின்றனர். கட்டிட வசதி இல்லாததால் மலைவாழ் மக்களின் பங்களிப்புடன் பள்ளி மைதானத்தில் தகர கொட்டகை அமைத்து அதில் மாணவர்களை அமர வைத்து பாடம் சொல்லிக்கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சுடர் தொண்டு நிறுவன இயக்குநர் நடராஜ் கூறியதாவது, குஜ்ஜம்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்து வந்ததையடுத்து கடந்தாண்டு அரசு உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தி உத்தரவிட்டது. ஆனால் அதன் பிறகு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டாமல் விட்டு விட்டதால் 9ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்புகளுக்கு கட்டிட வசதி இல்லாமல் உள்ளது. இதனால் வேறுவழியின்றி பள்ளி மைதானத்தில் தகர கொட்டகை அமைத்து அதில் மாணவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும் நிலை இருந்து வருகின்றது. கல்வித்துறையில் நாடு மிகப்பெரிய முன்னேற்றத்தை எட்டிவிட்டதாக பெருமை கொள்ளும் அரசுகள் கட்டிட வசதியை கூட அமைத்துக்கொடுக்காமல் இருப்பது வருத்தமளிக்கிறது. கூடுதல் வகுப்பறை கட்டிடம் கேட்டு பல முறை முறையிட்டும் அரசு செவிசாய்க்காமல் உள்ளது. இப்பள்ளியை தரம் உயர்த்துவதற்காக நீண்ட போராட்டம் நடத்தப்பட்டது. தற்போது தரம் உயர்த்தப்பட்ட பிறகு கட்டிடம் கேட்டு போராடி வேண்டிய நிலை உள்ளது. ஒவ்வொரு வசதியையும் போராடித்தான் பெற வேண்டிய நிலைக்கு மலைவாழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறு நடராஜ் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: