பட்டிவீரன்பட்டி அருகே தண்ணீரின்றி கருகி வரும் நெற்பயிர்கள்

பட்டிவீரன்பட்டி: பட்டிவீரன்பட்டி அருகே தண்ணீர் இல்லாததால் நெற்பயிர்கள் கருகி வருகின்றன. பயிர்களை காப்பாற்ற மருதாநதி அணையிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் அருகேயுள்ள மருதாநதி அணை கடந்த 28.11.18 அன்று திறக்கப்பட்டது. இதன் மூலம் 6583 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 90 நாட்கள் பழைய ஆயக்கட்டு விவசாயத்திற்கு நாள் ஒன்றுக்கு 20 கனஅடி, 30 நாட்கள் மறைமுக மற்றும் புதிய ஆயக்கட்டு விவசாயத்திற்கு நாள் ஒன்றுக்கு 70 கனஅடி என 90 கனஅடி தண்ணீர் முதல் போக சாகுபடிக்காக திறக்கப்பட்டது. இதன்மூலம் வாடிப்பட்டி பகுதியில் உள்ள கோபாலசமுத்திரம் கண்மாய்க்கு வந்த தண்ணீரைக் கொண்டு வாடிப்பட்டி பகுதியில் உள்ள 800 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெல் நடவு செய்துள்ளனர்.

தற்போது கண்மாய்க்கு வரும் மருதாநதி ஆற்று தண்ணீர் நின்றுவிட்டதால் பயிர்கள் கருகி வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே கோபாலசமுத்திரம் கண்மாய்க்கு தண்ணீர் விட பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘தற்போது சித்தரேவு பகுதியில் உள்ள தாமரைக்குளம், கருங்குளம், ரெங்கசமுத்திரம், சொட்டாங்குளம்  கண்மாய்களுக்கு தண்ணீர் செல்கிறது. இதில் 3 கண்மாய்கள் நிரம்பி சொட்டாங்குளம் கண்மாய் நிரம்பும் தருவாயில் உள்ளது. இந்த கண்மாய் நிரம்பியவுடன் வாடிப்பட்டி கோபாலசமுத்திரம் கண்மாய்க்கு 2 நாட்களில் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: