பிளாஸ்டிக் தடை தொடர்பான அரசாணை விவரங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

மதுரை : பிளாஸ்டிக் தடை தொடர்பான அரசாணை விபரங்களை தாக்கல் செய்ய அரசு வழக்கறிஞருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, 2019ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் தமிழகத்தில் பால், தயிர், எண்ணெய், மருத்துவப் பொருட்களுக்கான உறைகள் தவிர, இதர மக்காத பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் தாள்கள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் தேநீர் தண்ணீர் குவளைகள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள், பிளாஸ்டிக் கைப்பைகள், கொடிகள் உள்ளிட்ட பொருட்களைத் தயாரித்தல், விற்பனை செய்தல், சேமித்து வைத்தல் மற்றும் பயன்படுத்துதல் ஆகியவை சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986ன் கீழ் தமிழகம் முழுவதும் தடை செய்யப்படும் என்று அறிவித்தார். 50 மைக்ரான் அளவுக்குக் கீழே பிளாஸ்டிக் பொருட்களைத் தயாரிக்கக்கூடாது என்ற கட்டுப்பாடு ஏற்கனவே இருந்தது.

ஆனால் யாரும் அதை பின்பற்றாததால் இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக 23,450 பிளாஸ்டிக் உற்பத்தித் தொழிற்சாலைகள் இருக்கின்றன. இந்நிலையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளதால் சுமார் 50,000 பேர் வரை வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என பிளாஸ்டிக் உற்பத்தித் தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் இந்த தடையால் அரசுக்கு 1800 கோடி ரூபாய் வரி இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பிளாஸ்டிக் தடை தொடர்பான அரசாணை எண் 84ல் பிறப்பிக்கப்பட்டது குறித்த விவரங்களை தாக்கல் செய்ய அரசு வழக்கறிஞருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: